முக்கிய செய்திகள்

பி.ஜே. தாமஸ் பதவியில் இல்லை மத்திய மந்திரி வீரப்பமொய்லி

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      இந்தியா
veerappa moili

 

புதுடெல்லி,மார்ச்.- 5 - சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துவிட்டதால் பி.ஜே.தாமஸ் பதவியிலேயே இல்லை என்று அர்த்தமாகிவிடும். அதனால் அவர் ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக பி.ஜே. நியமிக்கப்பட்டது செல்லாது. அவரை நியமனம் செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்ட ஆவணங்களை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு சரியாக ஆய்வு செய்யவில்லை என்று சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாகும் என்று பா.ஜ.உள்பட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. 

இந்த தீர்ப்பு வெளியான சிறிது நேரத்தில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். வீரப்பமொய்லி பேட்டி அளித்த அடுத்த சிறிது நேரத்தில் பி.ஜே.தாமஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வில்ஸ் மாத்யூ கூறுகையில் ஆணையர் பதவியில் இருந்து தாமஸ் ராஜினாமா செய்யவில்லை. சுப்ரீம்கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து விரைவில் மறுபரிசீலனை மனுதாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். இதனால் பி.ஜே. தாமஸ் பதவி விலகிவிட்டாரா? அல்லது பதவி விலகவில்லையா என்ற குழப்பம் நீடித்தது. 

இந்தநிலையில் நேற்றும் வீரப்பமொய்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பி.ஜே. தாமஸ் பதவி விலகி விட்டாரா? அல்லது இல்லையா? என்று நிருபர்கள் கேட்டனர். சுப்ரீம்கோர்ட்டு செல்லாது என்று தீர்ப்பு அளித்த அதே வினாடியில் தாமஸின் பதவி இல்லாமல் போய்விட்டது. அவர் ராஜினாமா செய்தாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி அவர் பதவியில் இல்லை. அதனால் அவர் ராஜினாமா செய்துவிட்டாரா? என்ற கேள்விக்கே இடமில்லை என்று விளக்கமாக பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: