முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் இன்று லாரிகள் வழக்கம் போல் ஓடும்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.19 - தமிழ்நாட்டில் லாரிகள் வழக்கம்போல் ஓடும் என்று லாரி அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் லாரிகள் ஓடாது என்று ஒரு சில சங்கங்கள் அறிவித்து இருந்தன. இந்த நிலையில் தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் ஆர்.சுகுமார் உள்பட 15 நிர்வாகிகள் நேற்று காலை சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள். 

லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினார்கள். அவரும் ஆவன செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து லாரி வேலை நிறுத்தத்தில் தமிழ்நாட்டில் உள்ள லாரிகள் பங்கு பெறுவதில்லை என்று அவர்கள் கூறினார்கள். 

முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஆர்.சுகுமார் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் 6 லட்சம் லாரிகள் உள்ளன. இவை அனைத்தையும் இன்று இயக்குவதாக முடிவு செய்து உள்ளோம். தென் மாநில லாரி அதிபர்களின் கோரிக்கை குறித்து முதல்வரிடம் விரிவாக பேசினோம். சுங்கச் சாவடியில் கடந்த ஆட்சியில் டி.ஆர்.பாலுவால் ஏற்பட்ட குளறுபடியால் தனியார் நிறுவனங்கள் சுங்க வரியை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக வசூலித்தனர். இதை முதல்வரிடம் கூறியபோது குளறுபடிகளை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறினார். 

தென்மாநில  லாரி வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும் வழக்கம்போல் லாரிகள் தமிழகத்தில் இயங்கும் என்றும் தீர்மானித்துள்ளோம். தமிழகத்தை சார்ந்த எங்கள் நிர்வாகிகளுடன் இன்று (நேற்று) காலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து எங்களது கோரிக்கை சம்பந்தமாக விவாதித்தோம். முதல்வர் ஜெயலலிதாவும் எங்களின் நியாயமான கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். அதில் தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார். மேலும் சுங்கவரியை பொருத்தவரை உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இதன் பேரில் இந்த தென் மாநில வேலை நிறுத்தத்திலிருந்து தமிழகத்தை சார்ந்த  லாரி, டேங்கர், டிப்பர், டிரைலர், வேன், கார், பஸ் போன்ற அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் ஓடும். ஓடக்கூடிய வாகனங்களுக்கும் மற்றும் ஓட்டுநர்களுக்கும் தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் பாதுகாப்பு அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவை கேட்டுக் கொள்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!