ப.சிதம்பரம் பற்றி கடிதம்: பிரணாப் கருத்து சொல்ல மறுப்பு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க்,செப்.23 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் 2007ம் ஆண்டு நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்திடமும் விசாரணை நடத்த வேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் முன்பு வந்தது. அப்போது சிதம்பரத்திற்கு எதிராக ஒரு கடிதத்தை சுப்பிரமணியசாமி தாக்கல் செய்தார். அந்த கடிதம் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி நிதிமந்திரி பிரணாப் முகர்ஜியால் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை விற்க அப்போது நிதிமந்திரியாக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார். அவர் மட்டும் ஏல முறையை வலியுறுத்தியிருந்தால் ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்திருக்காது என்று கூறப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை சுப்ரீம் கோர்ட் பதிவு செய்து கொண்டது. 

இந்த கடித விவகாரம் வெளியானதும், ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. 

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறியதாவது, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் நீதிமன்ற விசாகணையில் உள்ளதால் அதன் மீது எந்த கருத்தையும் நான் கூற இயலாது. அனைத்து விவரங்களும் சுப்ரீம்கோர்ட்டின் ஆய்வில் உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிப்பது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட இந்த கடிதம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கோரிய தகவல்களுக்கு பல்வேறு துறைகள் மூலம் ஏராளமான பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன. அது போன்றே நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதமும் பெறப்பட்டு வெளியாகி இருக்கிறது. இப்படி பெறப்படும் தகவல்கள் அவ்வப்போது பரபரப்பாகி விடுகின்றன. அந்தளவில் மட்டுமே இந்த விவகாரத்தை நான் பார்க்கிறேன். இதற்கு மேல் இந்த விஷயத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: