முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் வடிவேலுக்கு எதிரான வழக்கில் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.16 - நடிகர் வடிவேலுவின் மேனேஜர் மர்ம சாவு குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- முதலில் எனது கணவர் வேலுச்சாமி ராஜ்கிரனிடம் வேலை பார்த்து வந்தார். அந்த வேலையிலிருந்தபோது நடிகர் வடிவேலுவிடம் பழக்கம் ஏற்பட்டது. அவரது பழகத்தின் அடிப்படையில் அவரிடம் மேனேஜராக எனது கணவர் பணியாற்றி வந்தார். கடந்த 4.2.2009-ல் வேலுசாமி எனது கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வடிவேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வடபழனி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எனது கணவரை வடிவேலுவே கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது வடிவேலு செய்யாத குற்றமில்லை. தி.மு.க. முக்கிய தலைவர்கள் இடத்தில் வடிவேலு நெருக்கமான பழக்கம் வைத்துள்ளார். அந்த சூழ்நிலையில் அவர் மீது என்னால் புகார் கொடுக்க முடியவில்லை.

கடந்த 19.8.11 அன்று கணவர் சாவு குறித்து சந்தேகம் எழுப்பி போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் மனு அளித்தேன். அதன் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகிறது. எனக்கு 2 மகன்கள் உள்ளனர். என்னோடு சேர்த்து என் 2 மகன்கன்களுக்கும் கொலை மிரட்டல் வருகிறது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். எனது கணவர் சாவு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பாண்டீஸ்வரி சார்பில் வக்கீல் மணிகண்டன் ஆஜராகி வாதாடும் போது, 

நடிகர் ராஜ்கிரனிடம் வடிவேலுவை அறிமுகம் செய்து வைத்தது வேலுசாமிதான். முதலில் வேலுச்சாமி ராஜ்கிரனிடம் கணக்கு பிள்ளையாக இருந்தார். பிறகு வடிவேலுக்கு மேனேஜரானார். வேலுச்சாமி தற்கொலை செய்து இறந்ததாக கூறப்படுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. 4.2.2009 தூக்கு போட்டு கொண்ட சந்தேக வழக்கின் எப்.ஐ.ஆர். ஆவணம் இதுவரை கோர்ட்டிற்கு அனுப்பப்படவில்லை என்று வாதிட்டார்.

இதையடுத்து பாண்டீஸ்வரி புகார் மனு குறித்து 1 வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி போலீஸ் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony