முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் புதுமையான முறையில் போராட்டம் நடத்துவேன்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 28 - தமிழக பிரச்சினைகளுக்காக மீண்டும் புதுமையான முறையில் போராட்டம் நடத்தப் போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட அவர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறிய அவர், எத்தனை அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும் கறுப்பு கொடி போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. முல்லைப் பெரியாறு பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை, காவிரி பிரச்சினை என எல்லா விவகாரங்களிலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. 

தமிழகத்தை கேரளம், கர்நாடகம், வடிகாலாக பயன்படுத்துகின்றன. இந்த பிரச்சினைகளுக்காக அடுத்த கட்டமாக புதுமையான முறையில் போராட்டங்கள் நடத்துவேன். 2 ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் திறக்கும் மருத்துவமனையை பிரதமர் மன்மோகன்சிங் திறக்க செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. கணித மேதை ராமானுஜர் விழாவில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது. 

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கருணாநிதி ஆட்சி காலத்திலேயே சுப்ரீம் கோர்ட் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு தீர்ப்பு வழங்கியுள்ளது. கருணாநிதி அதை செயல்படுத்தாமல் விட்டு விட்டார். தமிழர்கள் நலன் காக்கும் இந்த விஷயத்தில் மற்ற கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தினால் நானும் அவர்களுடன் இணைந்து போராட தயாராக இருக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony