இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

பாலசோர்,பிப்.11 - எதிரிகள் ஏவும் அணு ஏவுகணையை வானிலேயே வழிமறித்து தாக்கி அழிக்கும் அணு ஏவுகணை சோதனையை இந்தியா நேற்று வெற்றிகரமாக நடத்தியது. இதனையொட்டி விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் ஒத்தக்குழாய் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு எதிரிகளுடன் போர் நடத்திய இந்தியா, தற்போது ராணுவ வலிமையில் உலகமே வியக்கும் வன்னம் முன்னேறி வருகிறது. அக்னி, பிரித்வி போன்ற பல வகையான அணு ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வெற்றிகரமாக சோதித்து வருகிறது. இந்தநிலையில் எதிரிகள் அணு ஏவுகணைகளை ஏவும்போது அதை வழியிலேயே மறித்து தாக்கி அழிக்கும் அணுஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திட்டத்தை இந்தியா வேகமாக செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் ஒரிசே கடற்கரை பகுதியான பாலசோர் ஏவுதளத்தில் இருந்து நேற்று வழிமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக சோதனை நடத்தியது. இந்த ரக ஏவுகணை முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்டதாகும். பல அடுக்குகளை கொண்ட இந்த ஏவுகணை சோதனை மிகவும் அற்புதமாக நடந்தது என்று ஒருங்கிணைந்த சோதனை தளத்தின் இயக்குனர் எஸ்.பி.தாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். பாலசோர் அருகே கடலில் உள்ள ஐடிஆர் 3-வது சோதனை தளத்தில் இருந்து நேற்றுக்காலையில் சரியாக 10.13 மணிக்கு தரையில் இருந்து மற்றொரு இடத்தில் தரையில் இருக்கும் இலக்கை தாக்கும் பிரித்வி அணு ஏவுகணை ஏவப்பட்டது. இது ஏவப்பட்டு 3-வது நிமிடத்தில் சாண்டிபூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீலர் தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த வழிமறித்து தாக்கும் அணுஏவுகணைக்கு ரேடார் கருவியில் இருந்து சிக்னல் கிடைத்தது. அதாவது பிரித்வி ஏவுகணை வருகிறது என்பது உணர்த்தப்பட்டது. உடனே இந்த ஏவுகணை ஆகாயம் வழியாக பறந்து சென்று ஒரு குறிப்பிட்ட இலக்கில் பிரித்வி ஏவுகணையை அழிக்க வானம் வழியாக பறந்து சென்றது. திட்டமிட்டபடி கடல்மட்டத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் உயரத்தில் எதிரே வந்த அந்த ஏவுகணையை வழிமறித்து தாக்கி அழித்தது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. வழிமறித்து தாக்கும் ஏவுகணையானது 7.5 மீட்டர் நீளமுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: