முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா மரணம்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி தியோரா நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 77. அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
முரளி தியோரா வெகு நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும், இரண்டு நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பிய நிலையில் நேற்று அதிகாலை அவரது உயிர் பிரிந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் அஞ்சலிக்காக பகல் 12 மணி முதல் 2 மணி வரை மும்பை காங்கிரஸ் அலுவலகத்தில் முரளி தியோரா உடல் வைக்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு நேற்று பிற்பகல் நடைபெற்றது. பொருளாதார பட்டதாரியான முரளி தியோரா, 1977 முதல் 78 வரை மும்பை மாநகர மேயராக இருந்தார். பின்னர் மும்பை தெற்கு தொகுதியில் இருந்து 4 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மும்பை காங்கிரஸ் தலைவராக 22 ஆண்டுகள் செயலாற்றியிருக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் முதல் பருவத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளி தியோரா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறும்போது, "நேற்றுதான் முரளி தியோரா குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவரது உடல்நலன் குறித்து விசாரித்தேன். அதற்குள் இந்த துயரச் செய்தி வந்திருக்கிறது.
முரளி தியோராவின் பன்பு அவரை கட்சி பாகுபாடுகள் கடந்து விரும்பத்தக்கவராக வைத்திருந்தது. தியோராவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினரை தேசம் இழந்துவிட்டது. முரளி தியோரா மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைகிறேன்" என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து