முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு : 94 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது

திங்கட்கிழமை, 6 மே 2024      இந்தியா
Election 2024-03-29

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு  கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடும் காந்திநகர் உள்ளிட்ட 94 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி ஒட்டுப்பதிவு நடைபெறவுள்ளது.

மனுதாக்கல் நிறைவு... 

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி கடந்த மாதம் 19-ம் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. கடந்த 26-ம் தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. இதையடுத்து 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற செவ்வாய்கிழமை (7-ம் தேதி) ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 94 தொகுதிகளிலும் கடந்த 12-ந்தேதி மனு தாக்கல் தொடங்கியது. 19-ம் தேதி மனுதாக்கல் நிறைவு பெற்றது.

பிரசாரம் தீவிரம்...

இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியது. 3-ம் கட்ட தேர்தல் நடக்கும் 94 தொகுதிகளும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கி உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகளுக்கு ஒரே கட்ட மாக ஓட்டுப்பதிவு நடப்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் 14 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 11 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகள், தத்ரா நகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகள், காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட இருக்கிறது.

பிரசாரம் நிறைவு.... 

94 தொகுதிகளிலும் 3-ம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. அதனை அடுத்து நேற்று தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் அனைவரும் வெளியேறப்பட்டனர். இதைத்தொடர்ந்து இன்று நடக்கவிருக்கும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதனை அடுத்து 94 தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடிகளுக்கு அனைத்து பொருட்களும் கொண்டு சென்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 

குஜராத்தில்...

குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ள நிலையில், சூரத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ்குமார் சந்திரகாந்த் போட்டி யின்றி தேர்வானார். மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் ஏற்கனவே 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

முக்கிய வேட்பாளர்கள்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (காந்திநகர்), மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (குணா), சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் (மெயின்புரி), மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே (பாரமதி) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாவர். இத்தேர்தலில் மொத்தம் 1,351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து