முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயக்குமார் மர்ம மரணம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் தங்கபாலுவிடம் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      தமிழகம்
Nly Cong 2024-05-04

Source: provided

நெல்லை : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ், எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் மற்றும் கே.வி.தங்கபாலு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் (58) மே 2ம் தேதி இரவு முதல் காணவில்லை. மே 3 மாலையில் அவரைக் காணவில்லை எனக்கூறி அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்த நிலையில் மே 4 காலை கரைசத்துபுதூரில் ஜெயக்குமாரின் வீட்டின் பின் உள்ள அவரது தென்னந்தோப்பில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் ஜெயக்குமார் உடல் கிடந்தது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஜெயக்குமார் இறப்பு தொடர்பாக சந்தேகம் உள்ள நபர்களிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தினர். அவர் எழுதிய புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன், பள்ளி தாளாளர் ஜெய்கர், ஆஜந்த்ராஜா,குத்தாலிங்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதன்படி, தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபி மனோகரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருவருக்கும் இடையே உள்ள பணப்பரிமாற்றம் தொடர்பாக போலீசார் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலுவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் சம்மனை ஏற்று கே.வி.தங்கபாலு தூத்துக்குடி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: போலீசார் அழைப்பானை அனுப்பி உள்ளனர் அதற்காக வந்துள்ளேன். எனது 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் ஒரு பைசா கூட வாங்கியது இல்லை. வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. இதை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகினார். இதனைடையே, ஜெயக்குமார் வீட்டிலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து