முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி : அரியலூர் மாவட்டம் முதலிடம் - தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      தமிழகம்
SSLC 2024-05-10

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 91.55 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட இம்முறையும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக பள்ளி கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 26-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவ, மாணவிகள் எழுதினா். தோ்வு முடிவுகளை நேற்று காலை 9.30 மணிக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டது. தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

அதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 8 லட்சத்து 94 ஆயிரத்து 266 பேரில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.55 சதவீதமாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.16 சதவீதம் இந்த முறை அதிக மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டு 91.33 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு கூடுதலாக மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். தேர்வு எழுதிய 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்களில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 88.58 சதவீத மாணவர்கள் தேர்ச்சியாகும். 

மாணவிகளை பொறுத்தவரை 4 லட்சத்து 47 ஆயிரத்து 061 பேர் தேர்வு எழுதிய நிலையில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 94.54 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்களை விட 5.5 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். 

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 12 ஆயிரத்து 625 பள்ளிகள் நடத்தி இருந்தன. இதில் 4,105 பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 1,364 பள்ளிகள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 87.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 91.77 சதவீதம் பேரும், தனியார் சுயநிதி பள்ளிகளில் 97.43 சதவீத பேரும், இருபாலர்கள் படிக்கும் பள்ளிகளில் 91.93 பேரும், பெண்கள் பள்ளிகளில் 93.80 சதவீத பேரும், ஆண்கள் பள்ளிகளில் 83.17 சதவீத பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

தமிழ் பாடத்தில் 8 மாணவ, மாணவிகள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிகபட்சமாக கணிதம் பாடத்தில் 20 ஆயிரத்து 691 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 5,104 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 4,428 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழ் மொழி பாடத்தில் 96.85 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலம் பாடத்தில் 99.15 சதவீதம் பேரும், கணிதத்தில் 96.78 சதவீத பேரும், அறிவியல் பாடத்தில் 96.72 சதவீத பேரும், சமூக அறிவியலில் 95.74 சதவீத பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

10-ம் வகுப்பு தேர்வை 13 ஆயிரத்து 510 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எழுதி இருந்தனர். அவர்களில் 12 ஆயிரத்து 491 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். தேர்ச்சி சதவீதம் 92.42 ஆகும். தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகளில் 260 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 228 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்வில் வழக்கமாக விருதுநகர் மாவட்டம் சாதனை படைத்து வந்தது. தற்போது அரியலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பில் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து இருக்கிறார்கள். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

முன்னதாக நேற்று காலை 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மாணவ, மாணவிகள் பள்ளிகளில் சமா்ப்பித்து இருந்த உறுதிமொழிப்படி வத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்ணுக்கு தோ்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இணையதளங்கள் வாயிலாகவும் தோ்வு முடிவை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது  முதன்முதலாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாளை மறுமதிப்பீடு  செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு வரும் 15-ம் தேதி முதல்  20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இயக்குனர் சேதுராமவர்மா  தெரிவித்துள்ளார். இதே போல் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு  ஜூலை 2-ம் தேதி முதல் துணை தேர்வு நடைபெறும் என்றும் அதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11-ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கு வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து