முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி மருத்துவக்கல்லூரி இட ஒதுக்கீட்டில் ஊழல் அ.தி.மு.க குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி,ஜூலை.- 4 - தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு இட ஒதுக்கீட்டிற்கான இடங்களை பெறுவதில் மிகப் பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இது குறித்து விவாதிக்க சட்டமன்றத்தை கூட்ட முதல்வர் ரங்கசாமி தயாரா என்று அன்பழகன் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.  ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்காமல் சபாநாயகர் தேர்தலை நடத்துவதை அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்பதை அறிவித்து விட்டுதான் செய்தது. சபையில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத போது முதல்வர் கருத்து தெரிவித்தது சபை மரபுக்கு எதிரானது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறுகையில், 

சட்டமன்றத்தில் சபாநாயகர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசும் போது, உண்மைக்கு புறம்பான தகவல்களை நாங்கள் சபையில் இல்லாத போது தெரிவித்திருக்கிறார். ஜனநாயக கடமை ஆற்ற எதிர்க்கட்சிகள் சபைக்கு வந்திருக்க வேண்டும் என்றும், மக்கள் எண்ணத்தை நிறைவேற்றும் அரசு இது என்றும் கூறியிருக்கிறார். மக்கள் விரோத காங்கிரஸ் அரசை அகற்றி விட்டு அ.தி.முக.. கூட்டணி அரசு அமைய வேண்டும் என்பதே மக்கள் எண்ணம். 

ஆனால் வாக்களித்த மக்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் பெரும் துரோகத்தை செய்து விட்டு ரங்கசாமி ஆட்சி அமைத்திருக்கிறார். அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி ஜனநாயக கடமையாற்ற சட்டமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் கடமையாற்றி வரும் இயக்கம். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு அதற்கு எதிரான வாக்குகளை பெற்று விட்டு அக்கட்சி தலைவரிடமே தஞ்சம் அடைந்ததை மக்கள் பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள். இந்நிலையில் எதிர்க்கட்சிகளை குறை கூற முதல்வருக்கு என்ன தகுதி இருக்கிறது. 

தமிழகத்தில் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. புதுவையில் 7 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இந்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளிடம் இருந்து நேர்மையான முறையில் 50 சதவீத ஒதுக்கீடான 450 இடங்களை பெறவில்லை என்றால் ஆட்சியாளர்கள் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து கையூட்டு பெற்றதாக அர்த்தம். மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு பெறுவதில் மிகப் பெரிய ஊழல் நடைபெறுகிறது. இது பற்றி விவாதிக்க சட்டமன்றத்தை கூட்டினால் நிரூபிக்க தயாரா இருக்கிறோம். ஜனநாயக கடமையாற்ற வேண்டுமானால் சட்டமன்றத்தை கூட்டினால்தானே பேச முடியும். சட்டமன்றத்தில் ஆளும் கட்சியை சந்திக்க தயார். முதல்வர் ரங்கசாமி தயார் என்றால் ஒரு வாரத்திற்குள் சபையை கூட்டட்டும். இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்