முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.3 லட்சம் கோடி ஊழலில் கருணாநிதிக்கு தொடர்பு

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை, மார்ச்.29 - ஸ்பெக்ட்ரம் ஊழலை டாமின் கிரானைட் சுரங்க ஊழல் மிஞ்சியுள்ளது. இந்த டாமின் கிரானைட் சுரங்க ஊழல் சம்பந்தமாக வீடியோ ஆதாரங்களுடன் கருணாநிதிக்கு புகார் கொடுத்தும் டாமின் சுரங்கத்தில் தொடர்ந்து கொள்ளை நடந்து வருகிறது.

தமிழக அரசு தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 108 கிரானைட் சுரங்கங்களுக்கு தமிழ்நாடு மினரல்ஸ் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. கருணாநிதி ஊழல் செய்வதற்கு தமிழ்நாடு மினரல்ஸ் நிறுவனத்தை பயன்படுத்தி வருகிறார்.

 

கிரானைட் சுரங்கம்

 

ரூ.1,500 கோடி கிரானைட் கற்களை பி.ஆர்.பி. நிறுவனம் சட்டவிரோதமாக கடத்தி அவர்களது இடத்தில் சட்டவிரோதமாக கடத்தி வைத்திருப்பதாக தினபூமி நாளிதழ்  20.7.2010-ம் தேதியன்று செய்தி வெளியிட்டது. இந்த செய்தி வெளிவந்ததும் தினபூமி ஆசிரியர், பத்திரிகையாளர் மற்றும் மேலூர் தாலுகா கீழையூர் கிளை செயலாளர் எம்.முத்தையா ஆகியோரை பொய்வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பத்திரிகையாளர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அவசர அவசரமாக அடுத்த நாளே சிறையில் இருந்து விடுதலை செய்தனர். இதன் பின் பி.ஆர்.பி. நிறுவனம் கடத்தி ஸ்டாக் வைத்துள்ள கற்கள் எங்கு இருந்து கடத்தி வரப்பட்டது என்று ஆய்வு செய்ததில் இந்த கற்கள் அனைத்தும் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து திருட்டுத்தனமாக கடத்திவரப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த டாமின் கிரானைட் சுரங்க ஊழலை கண்டு பிடிக்க மிகபெரிய புலனாய்வு வேட்டையை தினபூமி நாளிதழ் நடத்தியது. இந்த வேட்டையில் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கம் இருக்கும் பகுதியில் ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டன. இந்த வேட்டையில் இந்தியாவிலேயே யாரும் பயன்படுத்தாத புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்த வேட்டையில் டாமின் சுரங்கங்களில் இருந்து கிரானைட் கற்களை வெட்டுவது, வெட்டிய கிரானைட் கற்களை பி.ஆர்.பி. நிறுவன லாரிகளில் ஏற்றுவது, டாமின் சுரங்கங்களில் இருந்து பி.ஆர்.பி. நிறுவனம் டாமின் முத்திரை இல்லாமல் லாரிகளில் திருடி எடுத்து வருவது. இந்த லாரிகள் பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்குள் செல்வது அங்குள்ள கிரேன்கள் மூலம் பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்குள் இறக்கி வைப்பது உட்பட அனைத்து காட்சிகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வேட்டை பலமாதங்கள் நடத்தப்பட்டது.

 

தினமும் 551 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்கள் கடத்தல்

 

இந்த வேட்டையில் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து மட்டும் தினமும் அதிகபட்சமாக 765 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களும் சராசரியாக 551 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களையும் டாமின் முத்திரை இல்லாமல் பி.ஆர்.பி. நிறுவனம் கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் 1.4.2010 முதல் 9.3.2011 முடிய சுமார் 1 வருட காலத்திற்கு வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து டாமின் நிறுவனம் 191 கியூபிக் மீட்டருக்கு மட்டும் பெர்மிட் வாங்கி உள்ளது.  ஆனால் தினமும் சராசரியாக 551 கியூபிக் மீட்டர் கற்களை பி.ஆர்.பி. நிறுவனம் திருடி கடத்தி வருகிறது. இதுபோல வருடத்திற்கு சுமார் 2 லட்சம் கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களை பி.ஆர்.பி. நிறுவனம் இந்த ஒரு டாமின் சுரங்கத்தில் இருந்து மட்டும் கொள்ளை அடித்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் 5 வருடங்களில் பி.ஆர்.பி. நிறுவனம் தொடர்ந்து இதுபோல கற்களை கடத்தி இருந்தால் இந்த ஒரு சுரங்கத்தில் இருந்து மட்டும் கடத்தப்பட்ட கற்களின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4000 கோடியாகும். இது போன்ற கொள்ளை அடிக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூ.5 லட்சம் கியூபிக் மீட்டர் கற்களை கீழவளவில் உள்ள பஞ்சபாண்டவர் மலைக்கு அருகில் பி.ஆர்.பி. நிறுவனம் பதுக்கி வைத்துள்ளது.

பி.ஆர்.பி. நிறுவனம் டாமின் சுரங்கத்தில் இருந்து கடத்தியது வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து கடத்தியதாக கூறப்படும் கற்கள் மட்டும் அல்ல புறாகூட்டுமலை மற்றும் பொக்கிஷமலை ஆகிய இடங்களில் இருத்தும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கற்கள் காணாமல் போய் உள்ளது. இங்கும் பி.ஆர்.பி. நிறுவனத்தினர் வேலை செய்ததாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.

வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் கடத்தப்பட்டுள்ளது. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 108 டாமின் சுரங்கங்களில் இருந்தும் இதே போல கிரானைட் கற்கள் கடத்தப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள டாமின் சுரங்கங்களில் இருந்து சுமார் 3 லட்சம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் கடத்தப்பட்டிருக்கலாம். எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள டாமின் கிரானைட் சுரங்கங்களை அளவு எடுத்தால் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் டாமின் கிரானைட் சுரங்க ஊழல் வெளிவரும்.

 

ரூ.3 லட்சம் கோடி டாமின் சுரங்க ஊழல் கருணாநிதிக்கு தொடர்பு

 

கீழையூர் ரெங்கசாமிபுரம் கிராமத்தில் டாமின் நிறுவனம் அனுமதி பெற்றுள்ள டாமின் சுரங்கத்தில் இருந்து சிந்து கிரானைட் நிறுவனம் திருட்டுத்தனமாக கொள்ளை அடித்து வருவதாக கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் எம்.முத்தையா என்பவர் 2.4.10. 15.5.10, 14.7.10, 27.10.10 ஆகிய தேதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் முதல்வர் கருணாநிதிக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தார். மேலும் பி.ஆர்.பி. நிறுவனம் விதிமுறைகளை மீறி 1500 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை கடத்தியது சம்பந்தமாக சாட்டிலைட் மற்றும் புகைப்படங்களுடன் 15.9.2010-ம் தேதியன்றும் மேலும் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து பி.ஆர்.பி. நிறுவனம் டாமின் முத்திரை இல்லாமலும், பெர்மிட் இல்லாமலும் சராசரியாக தினமும் 551 கியூபிக் மீட்டர் கற்களை திருடி கொள்ளை அடித்து பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்கு கடத்தி செல்வதற்கான வீடியோ ஆதாரங்களுடன் ரமேஷ்குமார் 17.3.11 அன்று முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். மேலும் இந்த டாமின் சுரங்க கடத்தலுக்கு காரணமான பி.ஆர்.பி. நிறுவனத்தின் பி.பழனிச்சாமி, சுரங்கதுறை உதவி இயக்குனர், மதுரை மாவட்ட ஆட்சிதலைவராக இருந்த காமராஜ் மற்றும் உயர்அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் கருணாநிதிக்கு புகார் அனுப்பியும் அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து டாமின் கிரானைட் சுரங்கத்தில் இருந்து கற்கள் கடத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. டாமின் சுரங்க ஊழலில் கருணாநிதிக்கு தொடர்பு இருப்பதால்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

 

கிரானைட் சுரங்க ஊழல் புகார் மீது இதுவரை கருணாநிதி எடுத்த நடவடிக்கை என்ன?

 

கிரானைட் சுரங்க ஊழல் புகார் மீது இதுவரை முதல்வர் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு பதில் கிரானைட் சுரங்க ஊழல் சம்பந்தமாக தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டதற்காக பொய் புகாரின் அடிப்படையில் தினபூமியின் ஆசிரியரையும், கிரானைட் சுரங்க ஊழல் சம்பந்தமாக புகார் கொடுத்ததற்காக தினபூமி பத்திரிகையாளர் எம்.ரமேஷ்குமாரையும், கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் எம்.முத்தையாவையும் பொய் புகாரின் பேரில் கைது செய்ததுதான் இதுவரை கருணாநிதி எடுத்த நடவடிக்கை ஆகும்.

 

மோசமான முதலமைச்சர் 

 

ஊழல் செய்வதிலும், அரசு சொத்துக்களை கொள்ளை அடிப்பவர்களை பாதுகாப்பதிலும் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான். தனது குடும்பம் வளம் பெறுவதற்காக மட்டுமே செயல்படும் ஒரே முதலமைச்சர் இந்தியாவிலேயே கருணாநிதி மட்டுமே. இப்படி ஒரு மோசமான முதலமைச்சரை இந்தியா இதுவரை பார்த்தது இல்லை.

 

 

ஊழல் கலெக்டரை மதுரையில் இருந்து அனுப்பிய தேர்தல் ஆணையம்

 

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எந்த கனிமத்தையும் பெர்மிட் இல்லாமல் ஏற்றி செல்லக்கூடாது என்பது விதி ஆகும். விதிமுறைகளுக்கு மாறாக பி.ஆர்.பி. நிறுவனம் கிரானைட் கற்களை கடத்தி பஞ்சபாண்டவர் மலைக்கு அருகில் பி.ஆர்.பி. நிறுவன இடத்தில் ஸ்டாக் வைத்திருப்பதாக புகார் கடிதம் அளிக்கப்பட்டது. இந்த புகாருக்கு பதில் அளித்த அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர் காமராஜ் இந்த இடத்தில் வைத்திருப்பது வேஸ்ட் கற்கள் என்று பதில் அளித்தார். (பி.ஆர்.பி. நிறுவன இடத்தில் சட்டவிரோதமாக ஸ்டாக் வைத்துள்ள கற்கள் பெரும்பாலும் கேங்சா எனப்படும் 7 அடி உயரமும் 11 அகலமும் கொண்டவை. கீழவளவில் உள்ள சிறுவர்களை கேட்டால் கூட இந்த கற்கள் விற்பனைக்கு தகுதியான நல்ல கற்கள் என்று கூறிவிடுவார்கள். மேலும் 2 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட கற்கள் கூட எல்லா இடங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது) மேலும் சுரங்கமே தோண்டாத இடத்தில் இருந்தும் வேஸ்ட் கற்கள் வந்ததாக தவறான பதிலை கலெக்டர் காமராஜ்  அளித்தார். மேலும் வேஸ்ட் கற்களை இந்த இடத்தில் வைத்துக் கொள்வதாக 2005-ம் ஆண்டே பி.ஆர்.பி. நிறுவனமும், முருகேசனும் கடிதம் கொடுத்துள்ளார்கள் என்றும் கூறி இருந்தார். ஆனால் வேஸ்ட் கற்களை சுரங்கத்தை விட்டு வெளி இடங்களில் வைத்துக் கொள்ள யாருக்கும் எந்த அதிகாரியும் அனுமதி அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதிர்ச்சி தகவலாக முருகேசன் சுரங்கம் தோண்டியதாக கூறப்படும் இடம் அரசு புறம்போக்கு நிலம் ஆகும். அரசு புறம்போக்கு நிலத்தில் தோண்டப்பட்ட கற்களை அரசு அனுமதி இல்லாமலும், பெர்மிட் இல்லாமலும் எப்படி எடுத்து வந்து இருக்க முடியும். மொத்தத்தில் மாவட்ட கலெக்டர் காமராஜ் துணையுடன் போர்ஜரி கடிதம் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் காமராஜ் கிரிமினல்களுடன் கூட்டு சேர்ந்து கிரிமினல் வேலைக்கு துணை போய் உள்ளார். பி.ஆர்.பி. நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து ரூ.1500 கோடி மதிப்புள்ள கற்களை பறிமுதல் செய்வதற்கு பதில் ஊழலுக்கு துணை போய்விட்டார். மாவட்ட கலெக்டர் காமராஜ் தேர்தல் கமிஷனால் மதுரையில் இருந்து மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் மதுரையில் தொடர்ந்து பணியில் இருந்தால் தேர்தலிலும் தில்லுமுல்லு செய்துவிடுவார் என்றுதான் தேர்தல் ஆணையம் மாற்றிவிட்டது போலும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்