இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு சம்மன்

 

சென்னை, மார்ச்.7 - ரூ.65 லட்சம் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜாவுக்கு சம்மன் அனுப்ப ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திரைப்படங்களுக்கான கடன் உதவி செய்யும் பைனான்சியர் போத்ரா என்பவர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குனர் கஸ்தூரி ராஜா தன்னிடம் ரூ.65 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதற்காக ரூ.25 லட்சம் மற்றும் ரூ.45 லட்சம் ஆகிய தொகைகளுக்கு காசோலைகளை போத்ராவிடம் வழங்கியிருந்தார். 

இந்த கடனை திருப்பி தராததால் ரூ.45 லட்சத்திற்கான காசோலையை போத்ரா தமது வங்கியில் போட்டு இருக்கிறார். பணம் இல்லாமல் அந்த காசோலை திரும்பி வந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது செக் மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார். இந்த வழக்கு ஜார்ஜ் டவுன் 8 வது நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வருகிற 11-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு 8 வது கோர்ட் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.