முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏற்காடு எம்.எல்.ஏ. மரணம்: முதல்வர் நேரில் அஞ்சலி

வியாழக்கிழமை, 18 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

சேலம் ஜூலை.19 - சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சி.பெருமாள் நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அதிமுகவின் தீவிர விசுவாசியான அவருக்கு தமிழக முதல்வர்  ஜெயலலிதா அவரது சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டி கிராமத்திற்கு நேற்று மாலை நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக கடந்த தேர்தலில் சி.பெருமாள்(62) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியாகும். இவரது மனைவி சரோஜா(52). இவர்களுக்கு ராஜேஷ்கண்ணா(37),தினேஷ் கண்ணா(36),சதீஷ்(30),கார்த்தி(28) ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.நேற்று அதிகாலை 4 மணிக்கு வாழப்பாடியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த பெருமாள் எம்.எல்.ஏ.விற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை சேலம் 5 ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் காலை 6.15 மணியளவில் இறந்து போனார். அவர் இறந்த செய்தி அறிந்த நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் விஜயலட்சுமி பழனிசாமி,எஸ்.கே.செல்வம்,எம்.கே.செல்வராஜ்,ஜி.வெங்கடாஜலம்,பல்பாக்கி கிருஷ்ணன், மற்றும் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினர் பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அதிமுகவினரும், ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுகவின் தீவிர விசுவாசியான அவர் இறந்த செய்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்  இறுதி அஞ்சலி செலுத்த பாப்பநாயக்கன்பட்டிக்கு வருவதாக தெரிவித்தார். அதன்படி நேற்று மாலை 3 மணியளவில் கொடநாட்டில் இருந்துஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்து இறங்கினார்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் சுமார் 80 கி.மீ.தூரம் உள்ள பாப்பநாயக்கன்பட்டிக்கு கார் மூலம் 6.05  மணிக்கு வந்தார். எம்.எல்.ஏ.பெருமாளின் வீட்டிற்கு சென்று அங்கு கண்ணாடி பேழையில் வைக்கப்படிருந்த அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு அழுது கொண்டிருந்த எம்.எல்.ஏ.வின் மனைவி சரோஜா மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது எம்.எல்.ஏ.பெருமாளின் மனைவி சரோஜா முதல்வர் ஜெயலலிதாவை கண்டதும் கதறி அழுது அவரது காலில் விழுந்து அழுது புரண்டார். அவரை தூக்கி கையை பிடித்து அரவணைத்த முதல்வர் அவருக்கு ஆறுமுதல் கூறினார்.அப்போது அவர் எனது குடும்பத்திற்கு இனி யாருமே இல்லை என்ன? செய்வேன் என்று கூறி கண்ணீர் விட்டார். இதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா எதற்காகவும் கவலை படவேண்டாம் நான் இருக்கிறேன். நான் பார்த்துக்கொள்கிறேன் என ஆறுதல் கூறினார்.பின்னர் அங்கு கூடியிருந்த அமைச்சர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.பின்னர் அங்கு கூடியிருந்த பல்லாயிர கணக்கான மக்களை பார்த்து கும்பிட்ட முதல்வர் காரில் ஏறி சேலம், சங்ககிரி வழியாக கொடநாட்டிற்கு காரில் சென்றார். 

இறந்து போன பெருமாள் எம்.எல்.ஏ.வின் உடலுக்கு சபாநாயகர் தனபால்,துணை சபா நாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம்,நத்தம் விஸ்வநாதன்,கே.பி.முனுசாமி,சி.பி.வைத்திலிங்கம்,எடப்பாடி கே.பழனிசாமி,பழனியப்பன்,தாமோதரன்,கே.வி.ராமலிங்கம்,எஸ்.பி.வேலுமணி,செந்தில் பாலாஜி,பா.வளர்மதி,பா.மோகன், சுப்பிரமணியம்,சின்னையா,எம்.சி.சம்பத்,வைகை செல்வன்,தங்கமணி,தோப்பு வெங்கடாஜலம்,ஆனந்தன்,பூனாட்சி, அரசு கொறடா மனோகரன், எம்.எல்.ஏ.க்கள் விஜயலட்சுமி பழனிசாமி,எம்.கே.செல்வராஜ்,எஸ்.கே.செல்வம்,ஜி.வெங்கடாஜலம்,பல்பாக்கி கிருஷ்ணன்,மாதேஸ்வரன், தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.சேந்தமங்கலம் சாந்தி, அரூர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.டில்லி பாபு,சேலம் கலெக்டர் மகரபூஷணன்,மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சதீஷ்குமார்,சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்பட ஏராளமான அதிமுகவினரும்,பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அவரது சொந்த தோட்டத்தில்  நேற்று அடக்கம் செய்யப்பட்டது.  

 

வாழ்க்கை குறிப்பு

 

மரணமடைந்த அதிமுக எம்.எல்.ஏ.சி.பெருமாள் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது தன்னை அதில் இணைத்துக் கொண்டவர் ஆத்தூர் மற்றும் வாழப்பாடி பகுதியில் போஸ்ட் ஆபீசில் கிளர்க்காக வாழ்க்கை தொடங்கி அவர் 1984 ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் கிளர்க்கா பணியாற்றி உள்ளார்.பின்னர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு 1984 ல் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அப்போது தோல்வியை தழுவினார்.1989 ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தில் மீண்டும் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவின் ஆத்தூர் வட்டார செயலாளராக இருந்த அவர் எம்.எல்.ஏ.ஆன பின்பு 1989 ல் சேலம் மாவட்ட துணைச் செயலாளர் ஆனார். பின்னர் 1991 ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆனார். 2001 தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.மீண்டும் 2011 ம் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்ட பெருமாள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக ஆனார்.தற்போது ஏற்காடு தொகுதியின் செயலாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இவரது மூத்த மகன் ராஜேஷ் கண்ணா சேலம் புறநகர் மாவட்ட பாசறை துணைச் செயலாளராக உள்ளார். இதில் 3 மகன்களுக்கு திருமணம் நடைப்பெற்றுவிட்டது.

 

ஜெ.வின் தீவிர விசுவாசி

 

மறைந்த ஏற்காடு எம்.எல்.ஏ.பெருமாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாவார்.1989 ல் இவர் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட போது ஏற்காடு தொகுதியில்தான் வாக்கு எண்ணிக்கை முதலில் முடிக்கப்பட்டு இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதே போல் 1991 மற்றும் 2011 லும் இவருக்கு முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பளித்தார். தொகுதி மக்களிடையே நல்ல பெயர் பெற்றுள்ள பஸ்சில்தான் சென்று வருவாராம். இந்த முறை வெற்றி பெற்ற பின்புதான் லோன் மூலம் கார் வாங்கினார். அந்த காரின் நெம்பர் கூட டி.என்.77 ஜெ.7777 ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்