முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழாவில் திருக்கல்யாணம்

வியாழக்கிழமை, 20 மார்ச் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், மார்ச்.21 - திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் - தெய்வானை திருகல்யாணம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை , மாலையில் சுவாமி - அம்பாள் பல்வேறு ரதங்களில் எழுந்தருளி வீதி உலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரம் 17 ம் தேதியும், சூரசம்ஹார லீலை 18 ம் தேதியும் நடைபெற்றது. 19 ம் தேதி பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் சிகர நிகழ்ச்சியாக நேற்று (20 ம் தேதி ) முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. அதன்படி நேற்று காலை 7 மணியளவில் உற்சவ சன்னதியில் முருப்பெருமானுக்கும், தெய்வானைக்கும் சர்வ அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாமி - அம்பாள் கோவிலில் இருந்து பசுமலை மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றனர். அதே சமயம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சந்தரேஸ்வரர் - மீனாட்சி ஆகியோர் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் முருகப்பெருமானும், தெய்வானையும் அங்கு வர, வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பிரியா விடையுடன் சுந்தரேஸ்வரர் - மீனாட்சி மற்றும் முருப்பெருமான். தெய்வானை ஆகியோர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது வழிநெடுகிலும் உள்ள மண்டக படிகளில் எழுந்தருளி அருள் பாலித்தனர். கோவிலுக்கு சென்றடைந்தபின் அங்குள்ள ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

மணமேடையில் மீனாட்சி - பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளினர். பின்னர் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து மங்கள வாத்தியம் முழங்க முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் விமரிசையாக நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் அட்சதை தூவி சாமி கும்பிட்டனர். 

நேற்று இரவு 8 மணியளவில் 16 கால் மண்டபம் அருகே பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் மதுரைக்கு புறப்பட்டு தங்கள் இருப்பிடம் சேர்ந்தனர். விழாவில் முத்தாய்ப்பாக இன்று காலை 6 மணியளவில் மகா தேரோட்டம் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்