முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிராஜ் சிங்கின் சர்ச்சைக்குரிய பேச்சு: பாஜக கண்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஏப் 21 - மோடியை எதிர்த்து விமர்சிப்பவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் இடமில்லை என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்றும் பேசிய பீகார் நவாடா தொகுதி வேட்பாளர் கிரிராஜ் சிங்கை பாஜக கண்டித்துள்ளது. 

கிரிராஜ் சிங்கின் பேச்சுக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

அதேவேளையில், கிரிராஜ் சிங்கின் பேச்சு பொறுப்பற்றது என்றும், அதனை பாஜக ஏற்காது என்றும் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி ட்வீட் மூலம் குறிப்பிட்டுள்ளார். 

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு எதிராக பல்வேறு கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. 

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், தியோகர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பீகார் மாநில மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பேசும்போது 'நரேந்திர மோடியை பிரதமராகவிடாமல் தடுப்பவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்லத் தயாராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு வருங்காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இடமில்லை. அவர்கள் வசிக்க பாகிஸ்தானில்தான் இடம் கிடைக்கும்" என்றார். 

இக்கூட்டத்தில் பாஜக முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். கிரிராஜின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 

மோடியின் தீவிர ஆதரவாளரான கிரிராஜ் சிங், பீகார் நவாடா தொகுதியில் தற்போது போட்டியிடுகிறார். இவர், 2005 முதல் 2013 வரை பிஹார் மாநில அமைச்சராக பதவி வகித்தது கவனிக்கத்தது. 

கிரிராஜ் சிங்கின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மீம் அஃப்சல், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, அவரை சிறையிலடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் முறைப்படி புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 

இதனிடையே, கிரிராஜ் சிங் மீண்டும் இதுபோன்ற கருத்தை வெளியிட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் எச்சரித்ததாகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்