முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமணத்திற்கான முன்பணத் தொகை உயர்வு: அமைச்சர்

புதன்கிழமை, 23 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.24 – சென்னை மாநகரில் மேலும் 100 சிற்றுந்துகள் மற்ற பகுதிகளில் 500 சிற்றுந்துகள் என மொத்தம் 600 சிற்றுந்துகள் வாங்கி இயக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். சட்டசபையில் நேற்று போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கையை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார்.அப்போது அவர் அறிவித்ததாவது:-

1. புதிய பணிமனைகள்

நீண்டகால பயனை அடிப்படையில் கொண்டும் மற்றும் பல்வேறு வகையான பயணிகளுக்கு சேவை செய்யும் பொருட்டும், அதிகரித்து வரும் பேருந்துகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, புதிதாக 7 பணிமனைகள் 2014-15ல் அமைக்கப்படும். அவை முறையே பவானி, இராஜபாளையம்-2, ஓரிக்கை-2, கீரனூர், மணமேல்குடி, தாமரைப்பாக்கம் மற்றும் திருமயம் ஆகும். பணிமனைக்கான கட்டமைப்பு செலவு ரூ.7 கோடியாகும்.

2. தகுதிச் சான்று புதுப்பிக்கும் பிரிவு - 3

பேருந்துகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், தொழில் திறனை அதிகரிக்கவும், நீண்ட கால பயனை கருத்தில் கொண்டும் புதிய தொழிற்கூடங்கள் அமைக்க வேண்டியது அவசியமாகிறது. மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, தண்டையார் பேட்டை, அயனாவரம் ஆகிய இடங்களில் புதிய தகுதிச் சான்று புதுப்பிக்கும் பிரிவும், புதுக்கோட்டையில் புதிய தகுதிச் சான்று புதுப்பிக்கும் பிரிவு மற்றும் உருளைப்பட்டை புதுப்பிக்கும் பிரிவு அமைக்கப்படும்.

இதற்கான மதிப்பீடு ரூ.3 கோடியாகும்.

3. மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான கூடுதல் சிறப்பு பேருந்துகள்

தற்போது பணிக்கு செல்லும் மகளிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் நலன் கருதி, மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, சென்னை மாநகரில் தற்போது இயக்கப்பட்டு வரும் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான பேருந்துகளின் எண்ணிக்கை 200ல் இருந்து 250 ஆக உயர்த்தி இயக்கப்படும்.

4.தொழில் நுட்ப பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி

நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வாகனங்களை அரசு அதிக அளவில் மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாகனங்களை முறையாக பராமரிப்பதற்கும், செலவீனத்தை குறைப்பதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, தொழில் நுட்ப பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஆண்டுக்கு கூடுதலாக ஆகும் செலவீனம் ரூ.25 இலட்சங்களாகும்.

5. குடும்ப இலவச பயணச் சலுகை

மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, பணியிலிருக்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்ப இலவச பயணச் சலுகை 4500 கி.மீ.லிருந்து 5000 கி.மீ.ஆக உயர்த்தப்படும்.

6. 200, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைத்தல்

தொழிலாளர்களின் நலன் கருதி, மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, 200 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பணிமனை மற்றும் தொழிற்கூடங்களில் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படும்.

7. திருமண முன்பணம் உயர்த்தி வழங்குதல்

தொழிலாளர்களின் மகள் மற்றும் மகன் திருமணத்திற்கு தற்போது முறையே ரூ.30 ஆயிரம் / ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது உயர்ந்து வரும் திருமணச் செலவுகளை கருத்தில் கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, திருமண முன்பணத் தொகை முறையே ரூ.40 ஆயிரம் / ரூ.30 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.

8. ஈமச்சடங்குகளுக்கான உதவித் தொகை உயர்த்தி வழங்குதல்

தற்போது தொழிலாளர்களின் ஈமச்சடங்கு செலவுகளுக்காக வழங்கப்பட்டு வரும் ரூ.2000-ஐ மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, ரூ.3000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்