முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

43 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை கோரி கடிதம்

புதன்கிழமை, 23 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 24 - இலங்கை சிறையில் உள்ள 43 மீனவர்களை விடுதலை செய்ய தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்..

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

பாக் நீரினை பகுதியில் தங்களது பாரம்பரிய இடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை -இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்ற மேலும் 2 சம்பவங்கள் குறித்து உங்களுக்கு கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

21-ந்தேதி ஜெகதாபட்டி னம் மற்றும் கோட்டை பட்டினத்தில் இருந்து 5 எந்திர படகுகளில் மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்களை சிங்கள கடற்படை சிறை பிடித்து சென்று காங்கேசன்துறை துறை முகத்துக்கு அழைத்து சென்றதாக எனது கவனத் துக்கு வந்துள்ளது.

அது போல அதே 21-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து 4 படகுகளில் மீன் பிடிக்க சென்ற 20 மீனவர்களை சிங்கள கடற்படை சிறை பிடித்து தலைமன்னாருக்கு அழைத்து சென்றுள்ளது.

இதற்கிடையே 16-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்களும் இலங்கை கடற்படையால் சிறை பிடித்து சென்றதாக எனக்கு தெரிய வந்துள்ளது. அந்த 5 மீனவர்களும் படகில் உள்ள என்ஜின் பழுதானதால் கடலில் தத்தளித்து உள்ளனர்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது. அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப் பட்டு 31.7.2014 வரை காவலில் வைக்கப்பட்டனர்.நமது மீனவர்கள்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறை பிடித்து செல்வது தமிழ்நாட்டு மீனவ சமுதாய மக்களிடம் பீதியையும், அமைதியற்ற சூழ்நிலையையும் உருவாக்கி உள்ளது. உங்கள் தலைமை யிலான அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுவரை இலங்கை சிறைகளில் இருந்து 225 மீனவர்களை மீட்டுள்ளது.

என்றாலும் அவர்களது 46 எந்திர படகுகள் தொடர்ந்து இலங்கை வசமே உள்ளது. நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் வகையில் இலங்கை அரசின் செயல்பாடு உள்ளது. இது கண்டனத்துக்குரியது.மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அந்த 46 மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அந்த எந்திர படகுகள் மீண்டும் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.

பாக்நீரினை பகுதியில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிப்பதை தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதேபோல கச்சத்தீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். அதை மீட்க வேண்டும் என்பதிலும் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கும் 1974 மற்றும் 1976 ஆண்டுகளில் இலங்கையுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து நான் தனிப்பட்ட முறையிலும் தமிழக அரசு சார்பிலும் சுப்ரீம்கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. எனவே அந்த ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு இலங்கையுடன் சர்வதேச கடல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை இந்தியா மேற்கொள்ளக் கூடாது.

நான் ஏற்கனவே 21-ந் தேதி எழுதிய கடிதத்தில் தமிழக மீனவர்களின் உணர்வு பூர்வமான இந்த பிரச் சினைக்கு நிரந்தர தீர்வு எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று குறிப் பிட்டு இருந்தேன்.

நமது மீனவர்களின் இந்த வாழ்வாதார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நான் தெரிவித்துள்ள பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.மேலும் தற்போது இலங்கை சிறைகளில் உள்ள 43 தமிழக மீனவர்களையும், 55 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்