முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டம்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை.25 - மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா?

கிருஷ்ணராயபுரம் தொகுதி, புலியூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தினை செயல்படுத்த அரசு ஆவன செய்யுமா? என்று செ. காமராஜ் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் வேலுமணி அளித்த பதிலுரை வருமாறு:-

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்பாதங்களில் வணங்குகிறேன்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி, புலியூர் பேரூராட்சியில் 2013-2014 ஆம் ஆண்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்த ரூ. 1 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய அரசு உறுதிபூண்டுள்ளதால், நிதி ஆதாரங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஆண்டுகளில், முன்னுரிமை அடிப்படையில் சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகரக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஜப்பான் கூட்டுறவு முகமை, ஜெர்மானிய மேம்பாட்டு வங்கி ஆகிய திட்டங்களின்கீழ் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பாதாள சாக்கடைத் திட்டத்தைப் பொறுத்தளவில் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியிலே 55 திட்டங்கள் தீட்டப்பட்டு. அதில் 35 திட்டங்கள் கைவிடப்பட்டு 20 திட்டங்களை எடுத்து, அதிலே ஒரேயொரு திட்டம் மட்டும் அவசர கதியாக, முழுமையாக முடிக்கப்பெறாத நிலையில், தேர்தல் நேரத்தில் துவக்கி வைக்கப்பட்டது. செயல்படுத்தாமல் விடுபட்ட 19 பாதாள சாக்கடைத் திட்டங்களும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய இந்த மூன்று ஆண்டுகால பொற்கால ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மேலும் 50 பாதாள சாக்கடைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அத்தனைத் திட்டங்களும் செயலாக்கத்தில் இருக்கின்றன என்பதை இப்பேரவையிலே பதிவு செய்யவிரும்புகிறேன்.

மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கோரியிருந்த அந்தப் பாலம் குறித்து புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய மேலான கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கொசு ஒழிப்பு திட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பான முறையிலே கொசு ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை நம்முடைய சுகாதாரத் துறை அமைச்சர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்கள். எந்த முதலமைச்சரும் செய்யாத ஒரு திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி வறுமைகோட்டிற்கு கீழே வாழும் குடிசைவாழ் மக்களை கொசுக்களால் ஏற்படும் நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் 9.97 கோடி ரூபாய் செலவில் 5,90,000 கொசு வலைகள் இலவசமாக வழங்கப்பட்டன. (மேசையைத் தட்டும் ஒலி) ஏழை மக்களுக்காக இந்தத் திட்டத்தை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்துள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் வேலுமணி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்