முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1.90 லட்சம் மீனவ மகளிருக்கும் அடையாள அட்டை: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை26 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதைப் போன்று 1.90 இலட்சம் மீனவ மகளிருக்கும் உயிரி தொழில்நுட்ப அடையாள அட்டை வழங்கப்படும் என்று . மீன் வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று மீன் வளத்துறை மானியக்கோரிக்கையை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் தாக்கல் செய்தார்.அப்போது அவர் அறிவித்ததாவது:

கடல் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதைப் போன்று மீன்பிடி தொழிலை சார்ந்தே தங்களது வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ளும் சுமார் 1.90 இலட்சம் மீனவ மகளிரை அடையாளம் காணவும், அவர்களின் பிறந்த நாள், குடியிருப்பு நிலை அறியவும், அவர்கள் தொழில் புரியும்போது பாதுகாப்பு வழங்கிடவும் ஏதுவாக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, 2014-15ஆம் ஆண்டில் உயிரி தொழில்நுட்ப அடையாள அட்டை 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எண்ணூர், கடலூர் மாவட்டத்திலுள்ள கடலூர் முதுநகர், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைப்பது தொடர்பான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளுதல்.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் சூரை மீன் கையாளுவதற்குரிய வசதிகளுடன் கூடிய மீன்பிடி துறைமுகம் அமைக்கவும், நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளப்பள்ளத்தில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கவும், கடலூர் மாவட்டம் கடலூர் முதுநகரில் உள்ள பழைய மீன்பிடித் துறைமுகத்தை புனரமைக்கவும், முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி4.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக்கூறு மற்றும் மாதிரி வடிவமைப்பு ஆய்வுகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்.

ஊரக பகுதியில் வாழும் மகளிர், வண்ணமீன் வளர்ப்புத் தொழிலை மேற்கொண்டு அதிக வருவாய் ஈட்டி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய பத்து மாவட்டங்களில் சோதனையடிப்படையில் வண்ணமீன் வளர்ப்பு அலகு ஒன்றிற்கு 50 விழுக்காடு மானியம், அதிகபட்சமாக 50,000/- ரூபாய் வரை வழங்கப்படும். இத்திட்டம், 2014-15ஆம் ஆண்டில் 2 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி செயல்படுத்தப்படும். .

தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன்வளர்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு, நடப்பாண்டில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி தமிழ்நாடு மீன்வளப் பல்கலைகழகம் மூலம் தீவிர மீன்வளர்ப்பு, மீன் நோய்கள் மற்றும் மண் மற்றும் நீர் தர ஆய்வகங்கள் அமைத்தல், மீன் வளர்ப்பு தொழில்நுட்பத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் போன்ற பணிகள் 1.90 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். .

விவசாயிகளிடையே பேராதரவு பெற்றுள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பினை மேற்கொள்ள 50 விழுக்காடு இடுபொருள் மானியம் வழங்கும் திட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி1 கோடியே 13 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடப்பாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். .

2014-15ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுhர், திருவாரூர், ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பொருத்தமான நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் இருபது மிதவை கூண்டுகள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் 1 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்து உள்நாட்டு மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன் வளர்ப்பு செயல்முறை விளக்கம் மேற்கொள்ளப்படும். .

உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடி திறனை அதிகரித்திடும் பொருட்டு உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கங்களைச் சார்ந்த 1,000 உறுப்பினர்களுக்கு தலா இருபது கிலோ அளவிலான நைலான் மீன்பிடி வலை வாங்குவதற்கு 50 விழுக்காடு மானியமும், 50 பயனாளிகளுக்கு இழு வலைகள் வாங்குவதற்கு 50 விழுக்காடு மானியமும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி 78 இலட்சம் ரூபாய் செலவில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும்.

குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராகும் மரபணு மேம்படுத்தப்பட்ட பண்ணை திலேப்பியா மீன்வளர்ப்பினை அறிமுகப்படுத்துமுகமாக, பண்ணைக் குட்டைகளில் இந்த வகை மீன்வளர்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு இடுபொருள் செலவினத்தில் 50 விழுக்காடு மானியமாக வழங்கமுதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி2014-15ஆம் ஆண்டில் 72 இலட்சம் ரூபாயில் செயல்படுத்தப்படும்.

வெளிநாடுகளில் தற்சமயம் மீன்வளர்ப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை தமிழ்நாடு மீன்வளத்துறையைச் சார்ந்த தொழில் நுட்ப அலுவலர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அந்நாடுகளுக்கு சென்று தேவையான பயிற்சிகள் பெற முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் 2014-15ஆம் ஆண்டில் 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்..

உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் உள்நாட்டு நீர்நிலைகளில் பிடிக்கப்படும் மீன்களை சுகாதாரமான முறையில் கையாளுவதற்கும் அதன் மூலம் அவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு உரிய விலையினைப் பெற்றிடவும், ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் நீர்த்தேக்கத்தில் நடப்பாண்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளம் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி60 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் நவீன மீன் விற்பனை அங்காடிகளை பல இடங்களில் நிறுவி மக்களுக்கு தரமான மீன்களை நியாயமான விலையில் விற்பனை செய்து வருகிறது. இச்சேவையினை மேலும் விரிவாக்கிடமுதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படிசென்னை, மதுரை மற்றும் பிற நகரங்களில் 2014-15 ஆம் ஆண்டில், 80 இலட்சம் ரூபாய் செலவில் எட்டு நவீன மீன் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். .

தரமான மீன்களை சுகாதாரமான முறையில், நியாயமான விலையில் பொது மக்களின் வசிப்பிடத்திற்கே சென்று மீன் விற்பனையை செய்ய ஏதுவாக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, சென்னையில் மேலும் 5 நடமாடும் மீன்விற்பனை நிலையங்கள் 50 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தால் நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இப்பணிகளை மேலும் விரிவுபடுத்தி தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தை சிறந்த முறையில் நிர்வகித்திட, சென்னை சாந்தோமில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்திற்கு கூடுதல் நிர்வாக அலுவலக கட்டிடம் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, 2014-15-ஆம் ஆண்டில் கட்டப்படும்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, 2014-15ஆம் ஆண்டில் 1 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஒரு புதிய கடல் மீன்குஞ்சு பொறிப்பகம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் மூலம் நிறுவப்படும். இதில் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் மாற்று வாழ்வாதாரத்திற்கு தேவைப்படும் பயிற்சிகள் மற்றும் செயல்நுட்ப திறனும் அளிக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நோய் தாக்காத தரமான நாட்டு இன இறால் குஞ்சுகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்திட தேவைப்படும் நோய் தாக்காத நாட்டு இன தாய் இறால் வங்கி, முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, 1 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மூலம் 2014-15ஆம் ஆண்டில் நிறுவப்படும்.

குறுகிய காலத்தில் வேகமாக வளரக்கூடிய மீனின வகைகளுக்கான மீன் குஞ்சு பொறிப்பகம் அமைத்து, அதன் தொழில்நுட்ப பயிற்சியினை மீன்வளர்போர்க்கு வழங்க 2014-15-ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின்கீழ் மண்டல மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் 1 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படிஅமைக்கப்படும்.

சென்னை இராயபுரத்தில் இயங்கி வரும் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயங்கி வரும் சார் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் இயங்கி வரும் மீன்பிடி துறைமுக உதவி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு 2014-15 ஆம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, 67 இலட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்