முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. கலவரத்துக்கு மாநில அரசு பொறுப்பேற்க வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜூலை 29 - உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த கலவரம் வன்முறைக்கு மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.

பாஜகவை சேர்ந்த ஷாநவாஸ் ஹூசைன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கலவரத்துக்கு மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அரசு நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து விட்டது. வாக்கு வங்கி அரசியலுக்காக ஆட்சியாளர்களே மத ரீதியான பதட்ட நிலை இருப்பதை விரும்புவது போலிருக்கிறது. பாஜக அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புகிறது. அனைவரும் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப வழிபாடு செய்ய உரிமை உள்ளது. அதில் யாரும் குறுக்கிட முடியாது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான மாநில அரசு எல்லா தரப்பிலும் பலவீனமடைந்துள்ளது. மாநிலத்தில் அரசு நிர்வாகம் அறவே செயல்படவில்லை என்று ஷாநவாஸ் ஹூசேன் கூறினார்.

மாநில அரசின் நிர்வாக திறன் குறைவுதான் சஹாரன்பூர் வன்முறைக்கு காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் உள்ளூர் நிர்வாகம் செயல்பட தவறி விட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரீதா பகுகுணா ஜோஷி கூறியுள்ளார். நிலம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு உள்ளது. காவல் துறையினரின் உதவியை ஒரு தரப்பு நாடியுள்ளது. அனைவரும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இதனை உறுதி செய்வது அதிகாரிகளின் கடமையாகும் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றம் சாட்டி உள்ளது. உத்தரபிரதேசத்தில் அமைதியை குலைப்பதற்காக நாகபுரியில் திட்டம் தீட்டப்படுகிறது என்று சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், மாநில சிறுபான்மையினர் நல அமைச்சருமான ஆசம்கான் கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம் நாகபுரியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வன்முறை காரணமாக பதட்டம் நிறைந்துள்ள சஹாரன்பூர் மற்றும் மொராதாபாத் ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்