முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடி சிறப்பு கைத்தறி கண்காட்சி சென்னையில் தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை 30 - ஆடி சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை, சென்னையில் 10 நாட்கள் நடைபெறுகிறது. கண்காட்சியை அமைச்சர்கள் வளர்மதி மற்றும் கோகுல இந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நேற்று முன்தினம் முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை, கைத்தறி துணிகளுக்கான ஆடி சிறப்பு கண்காட்சி நடக்கிறது. கைத்தறி துறை அமைச்சர் கோகுல இந்திரா, சமூக நலத் துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கண்காட்சியை திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.

கண்காட்சியில் சுமார் 25க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் பட்டு, கோவை கோரா பட்டு, மென் பட்டு, திருபுவனம், ஆரணி, பரமக்குடி, கும்பகோணம் ஜரிகை பட்டு வகைகள், பவானி ஜமுக்காளம், திண்டுக்கல், சின்னாளப்பட்டி சேலைகள், சேலம், நாகர்கோவில், திருச்சி, அருப்புக்கோட்டை பருத்தி வேட்டி வகைகள், குறிஞ்சிப்பாடி, குடியாத்தம் வகை கைத்தறி துணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம், குடியாத்தம் மற்றும் திருக்கழுங்குன்றம் லுங்கிகளும், ஈரோடு, கரூர் மற்றும் சென்னிமலை படுக்கை விரிப்புகள், துண்டுகளும் விற்பனைக்கு வந்துள்ளன. கண்காட்சியில் துணிகளுக்கு 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கைத்தறி துறை அதிகாரிகள் கூறும்போது, ‘கடந்த நிதியாண்டில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 821.35 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு, 936.66 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில் 2 கோடி ரூபாய்க்கு கைத்தறி துணி விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்