முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

29-ந் தேதி அ.தி.மு.க பொது செயலாளருக்கான தேர்தல்

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.20: அதிமுகவின் அமைப்புத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுகிறது. முதலாவதாக அக்கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தல் இம்மாதம் 29-ந் தேதி நடைபெறுவதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது..

அதிமுகவின் சட்ட திட்ட விதிகளின் படி நடைபெறும் இந்த தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் படஉள்ளார்.

அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு 1988-ம் ஆண்டு ஜெயலலிதா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து பொதுச்செயலாளர் பொறுப்பை வகித்து வருகிறார்.

தேர்தல் விதிமுறைகளின்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் அதிமுகவை பொறுத்தவரை, கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல்தான் முதலாவதாக நடைபெறும். அதன் பிறகுதான் கிளைக் கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகளும், அதனை அடுத்து மாவட்ட, மாநில நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதன்படி அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் இம்மாதம் 29-ந் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இம்மாதம் 20-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெறும் என்று அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதி-30, பிரிவு-2-ன் படி கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக்கு ஏற்ப கழக பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

தேர்தல் ஆணையாளர்: விசாலாட்சி நெடுஞ்செழியன் (அமைப்புச் செயலாளர்)

வேட்புமனு தாக்கல்: 20.8.2014 புதன்கிழமை காலை 9 மணி முதல் 24.8.2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை.

வேட்பு மனு பரிசீலனை: 27.8.2014

வேட்பு மனு திரும்பப் பெறுதல்: 28.8.2014

தேர்தல் நாள் மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு: 29.8.2014 வெள்ளிக்கிழமை.

இவ்வாறு அதிமுக தலைமைக் கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிமுகவின் லட்சக்கணக்கான நிர்வாகிகளும், ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்களும் கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒருமனதாக தேர்வு செய்வர்...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்