முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க வாரீர்: அமைச்சர் அழைப்பு

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக 21 - முல்லைப் பெரியாறு அணையை மீட்டு வெற்றி திருமகளாய் மதுரை வருகை தரும் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க அலைகடலென திரண்டு வாரீர் என்று பொதுமக்களுக்கும், அதிமுகவினருக்கும் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தென் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை கடந்த 37 ஆண்டுகளாக இருந்து வந்தது. இதில் மிகப் பெரிய சட்டப் போராட்டம் நடத்தி அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தி மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்துள்ளார் தமிழக முதல்வர் அம்மா. அவருக்கு 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை மதுரையில் பாராட்டு விழா நடக்கிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தியது 5 மாவட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் 5 மாவட் ட மக்களின் பாசனத்திற்கும், குடிநீருக்கும் சாதகமான நிலை உருவாகி உள்ளது. எவரும் செய்ய முடியாத அளப்பறிய சரித்திர சாதனையை நமது அம்மா நிகழ்த்தியுள்ளார். ஜாதி, மத இனங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து பிரிவினருக்கும் பாரபட்சமின்றி பல்வேறு நலத்திட்டங்களையும், உதவிகளையும் நமது அம்மா வழங்கி வருகிறார்.

கடந்த 2010ம் ஆண்டு இதே இடத்தில்(ரிங் ரோடு) கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசுவதற்காக நமது அம்மா வந்தார். அப்போது அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் விடப்பட்டது. அவற்றை எல்லாம் அவர் துச்சமென நினைத்து எதற்கும் எவருக்கும் அஞ்சாமல் மதுரை வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார். அப்போது ரவுடிகளிடமும், கொலை, கொள்ளையர்களிடமும் சிக்கி தவிக்கும் மதுரையை மீட்பேன். விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி காட்டுவேன் என்று சூளுரைத்தார். அதே போலவே ஆட்சிக்கு வந்தவுடன் மதுரை மாநகரை ரவுடிகளிடம் இருந்து மீட்டு மீண்டும் கோவில் மாநகராக்கினார். மதுரை மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க செய்தார். இன்றைக்கு மக்கள் நிம்மதியாக வாழுகின்றனர். அதே போல் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பினை பெற்று அதனை நடைமுறைப்படுத்திய முதல்வர் அம்மா மதுரை வருகிறார். 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நடக்கும் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வருகிறார். அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் 5 மாவட்ட மக்களும், குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டு முதல்வர் அம்மாவை வரவேற்க வேண்டும். அதே போல் கழகத்தின் பல்வேறு தரப்பு நிர்வாகிகளும், முன்னணி தலைவர்களும், தொண்டர்களும், செயல் வீரர் மற்றும் வீராங்கனைகளும் அலைகடலென திரண்டு வந்து வரவேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்