முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸா விவகாரம்: அமைதி காண ஐரோப்பிய நாடுகள் முயற்சி

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஆக 24:

காஸாவில் அமைதி திரும்புவது தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு குழு தீர்மானத்தில் சில முக்கிய ஆலோசனைகளை ஐரோப்பிய நாடுகள் அளித்துள்ளன என ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 6 வாரங்களாக காஸா பகுதியில் சண்டை நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் தளபதிகள் மூவர் கொல்லப்பட்டனர். ஜூன் 8ம் தேதி முதல் நடைபெற்று வரும் சண்டையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நீடித்த அமைதிக்காக எகிப்தின் முயற்சியில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் காணப்படாத நிலையில் ஐ.நா சார்பில் அமைதிக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐ.நா பாதுகாப்பு குழுவின் புதிய அமைதி முயற்சியில் முனைப்பு காட்டி வருகின்றன. நீடித்த அமைதி காண்பதற்கான ஐ.நா தீர்மானத்தில் உள்படுத்த வேண்டிய சில அம்சங்கள் குறித்து இந்நாடுகள் சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளன. அதில் அமைதி முயற்சிகள் தொடர்பாக ஐ.நா. செயலரின் பங்கு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸா பகுதியில் இஸ்ரேல் விதித்துள்ள தடையை நீக்குவது, அமைதி உடன்படிக்கையை மீறும் வகையில் நடக்கும் சம்பவங்களை கண்காணிப்பது, காஸா பகுதிக்குள் வரும் அனைத்து பொருள்களையும் கண்காணிப்பது உள்ளிட்ட ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக காஸாவில் அமைதி திரும்புவது தொடர்பாக ஜோர்டன் கொண்டு வந்த வரைவு தீர்மானம் குறி்த்து பாதுகாப்பு குழுவில் பல்வேறு உறுப்பினர் நாடுகள் ஆட்சேபம் எழுப்பி இருந்தன. குறிப்பாக அமெரிக்காவின் ஆட்சேபத்துக்கு பிறகு புதிய ஆலோசனைகளை உள்படுத்தி மீண்டும் ஒரு வரைவு தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது. 15 நாடுகளை உறுப்பினராக கொண்ட பாதுகாப்பு குழுவில் புதிய தீர்மானத்தை ஏற்க செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு குறித்து இஸ்ரேலின் கவலைகளையும் பாலஸ்தீனத்தின் கோரிக்கைகளையும் கவனத்தில் கொள்ளும் விதத்தில் அமைதி உடன்படிக்கைக்கான வரையறைகள் வகுக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனியின் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை செயல்படுத்தும் விதமாக ஐ.நா. செயலர் பான்கீமூன் முயற்சிகள் மேற்கொண்டு நீடித்த அமைதி உடன்படிக்கைக்கு வழிகோல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்