முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணவர் வீட்டுக்குள் செல்ல போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவு

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.24 - கணவர் வீட்டில் உள்ள பொருள்களை எடுப்பதற்கு மனைவிக்கு போதிய பாதுகாப்பு வழங்க அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த ஜி.பவானி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது கணவர் பெயர் ஆர்.வி.ராஜகோபாலன். அவரை கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்தேன். எங்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

எனது கணவர், குழந்தையுடன் அம்பத்தூரில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தேன். எனது கணவர் பேராசை குணத்தால் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தினார். இது தவிர, எனது பெயரில் உள்ள நிலத்தை விற்கச் சொல்லி மன ரீதியாகவும் தொல்லை செய்தார்.

இனி இங்கு இருந்தால் எனது வாழக்கைக்கு ஆபத்து என நினைத்து, கடந்த ஜூன் மாதம் அங்கிருந்து புறப்பட்டு பெங்களூருவில் உள்ள எனது சகோதரர், அம்மாவுடன் வசித்து வருகிறேன்.

எனது பொருள்கள் எதையும் அங்கிருந்து எடுத்துச் செல்லவில்லை. மாற்றுத் துணி கூட கொண்டு செல்லவில்லை. மருத்துவ ஆவணங்கள் இல்லாததால் சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியவில்லை. எனது மகளுக்குப் போட வேண்டிய தடுப்பூசி கூட போட முடியவில்லை.

எனது அனைத்து சான்றிதழ்கள், பாஸ்போர்ட் உள்படன அனைத்தும் எனது கணவர் வீட்டில் உள்ளது. அவர்கள் அதை சேதப்படுத்தி இருப்பார்களோ என்று பயமாகவும் உள்ளது.

அதை எனது கணவர், அவரது தந்தை இருவரும் தர மறுக்கின்றனர். இது குறித்து அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, எனது கணவர் வீட்டில் உள்ள எனக்கும், மகளுக்கும் சொந்தமான அனைத்து பொருள்களையும் எடுப்பதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கணவர் வீட்டில் உள்ள அவருக்கு சொந்தமான அனைத்து பொருள்களையும் எடுப்பதற்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மேலும், மனுதாரர் அளித்த புகார் மீது சட்ட விதிகளுக்குள்பட்டு நடவடிக்கை எடுக்கவும் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்