முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாநிதிமாறன் விவகாரம்: ஒரு பகுதிக்கு இடைக்காலத் தடை

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.29 - கலாநிதிமாறன் நிறுவன கேபிள் உரிமம் ரத்து விவகாரத்தில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் ஒரு பகுதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

சன் குழுமத்தின் கல் கேபிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விட்டல் சம்பத்குமரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: கல் கேபிள் நிறுவனம் தொலைக்காட்சி சேனல்களை டிஜிட்டல் முறையில் சென்னை, கோவை உள்பட பல பகுதிகளில் எம்எஸ்ஓ மூலம் ஒளிபரப்பி வருகிறது. இதற்காக மத்திய தகவல் ஒளிபரப்பு துறை உரிமம் வழங்கியுள்ளது.

இந்த உரிமத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து பாதுகாப்பு ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சம் பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

அது தொடர்பாக எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஒப்புதல் வழங்கவில்லை. அதனால், சென்னை, கோவை ஆகிய நகரங்களின் எம்எஸ்ஓ உரிமத்தை ரத்து செய்து கடந்த 20-ஆம் தேதி மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை உத்தரவிட்டது.

இது தொடர்பாக எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை. மேலும், பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுத்ததற்கான எந்தக் காரணமும் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. உடனடியாக எங்களது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக எங்களது வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், 15 நாள்களுக்குப் பிறகு எங்களது கேபிள் நிறுவனம் ஒளிபரப்பாகாது, வேறு கேபிள் நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளுங்கள் என்று ஒளிபரப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, எந்த முன்னறிவிப்பும் வழங்காமல் உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், ஒளிபரப்பு உரிமம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் முன்பு வியாழக்கிழமை (ஆக. 28) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மத்திய அரசு உத்தரவின் ஒரு பகுதியான, 15 நாள்களுக்குப் பிறகு எங்களது கேபிள் நிறுவனம் ஒளிபரப்பாகாது, வேறு கேபிள் நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளுங்கள் என்று ஒளிபரப்புமாறு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார். இதையடுத்து செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்