முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி: மன்மோகன் தவறு செய்திருக்கலாம்: கமல்நாத்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, செப் 14 - மத்திய முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத்ராய், 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ராணுவ தளவாட கொள்முதல் ஒதுக்கீடு போன்றவற்றில் நிதி முறைகேடு நடைபெற்றதாக அவர் அடுத்தடுத்து தாக்கல் செய்த அறிக்கைகள் கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடியை அளித்தன.

வினோத்ராய் எழுதியுள்ள நாட் ஜஸ்ட் அன் அக்கவுண்டன்ட் என்ற புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த புத்தகம் குறித்து அவர் பேட்டியளித்து இருந்தார். அப்போது பிரதமராக மன்மோகன்சிங் பதவி வகித்த காலத்தில் அவரது கவனத்துக்கு உட்பட்டே 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு ஊழல்களும் நடந்தன என்று குற்றம் சாட்டினார். மேலும் கணக்கு தணிக்கை அறிக்கையில் மன்மோகன்சிங் பெயரை சேர்க்க கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தன்னை நிர்ப்பந்தப்படுத்தியதாகவும் வினோத்ராய் குற்றம் சாட்டி இருந்தார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் போதும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டின் போதும் பிரதமராக இருந்தவர் என்ற முறையில் மன்மோகன்சிங் தனக்குரிய பொறுப்புகளை தட்டி கழிக்க முடியாது என்றும் அவர் கூறி இருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல்நாத், மன்மோகன்சிங்குக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளார். தனியார் டெலிவிசனுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் நடைபெறலாம் என்று பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை எச்சரித்தேன். இந்த விவகாரத்தில் ஒரு குழு அமைத்து விவாதித்த பிறகே அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று நான் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவர் எதையும் செய்யாமல் இருந்து விட்டார். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றமளித்தது. நடவடிக்கை எடுக்காததன் மூலம் அவர் தவறு செய்திருக்கலாம். அவர் செயல்படாதது எனக்கு அதிருப்தியை அளித்தது. இவ்வாறு கமல்நாத் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்