முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 18–உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, கடலூர், விருத்தாசலம், அரக்கோணம், ராமநாதபுரம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவி உட்பட 530 பதவிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.எந்த அசம்பாவிதமும் இன்றி அமைதியாக தேர்தல் நடந்தது.

.2 மேயர், 4 நகராட்சி தலைவர் பதவி தவிர 8 மாநகராட்சி கவுன்சிலர்கள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 39 பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 530 உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளைப் பிடிப்பதற்காக 1,486 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அனைத்து இடங்களிலும் அண்ணா தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. பா.ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் மட்டுமே களத்தில் உள்ளனர்.

காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. மற்ற உள்ளாட்சி பதவிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் வாக்குச்சீட்டு முறைப்படி ஓட்டுக்கள் போடப்பட்டன.

பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடந்த ஓட்டுப்பதிவு முழுவதும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டன. காலை முதலே பெரும்பாலான பகுதிகளில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஆண்களும் பெண்களும் நீண்ட ‘கியூ’வில் நின்று ஓட்டு போட்டனர். நேரம் ஆக ஆக ஓட்டுப்போட வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானது

.கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார், பாரதீய ஜனதா வேட்பாளராக நந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக பத்மனாபன் உள்பட 16 பேர் போட்டியிடுகிறார்கள்.

கோவை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்காக 100 வார்டுகளிலும் 1,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 236 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கும் முன்னரே அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆர்வமாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு அண்ணா.தி.மு.க. சார்பில் அந்தோணி கிரேசி, பாரதீய ஜனதா சார்பில் ஜெயலட்சுமி மற்றும் 5 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். .

.இதுபோன்று 37 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலும் நடந்தது. இதற்காக 250 வாக்குச்சாவடிகள் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். .

பதட்டம் நிறைந்த 114 வாக்குச்சாவடிகளில் கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் கடலூர் மற்றும் விருத்தாசலம் நகரசபை தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது கடலூர் நகரசபை தலைவராக இருந்த சி.கே. சுப்பிரமணியன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அண்ணா.தி.மு.க. சார்பில் குமரனும், பாரதீய ஜனதா சார்பில் துறைமுகம் செல்வமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாதவனும், சுயேச்சை வேட்பாளர் எஸ்.எஸ்.ராமச்சந்திரனும் போட்டியிடுகிறார்கள்.126 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன

இதுபோல் விருத்தாசலம் நகரசபை தலைவராக இருந்த ஆர்.டி. அரங்கநாதன் மரணம் அடைந்ததையடுத்து அந்த பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அண்ணா.தி.மு.க. சார்பில் அருளழகனும், பாரதீய ஜனதா சார்பில் சரவணனும் போட்டியிடுகிறார்கள். வாக்களிப்பதற்காக 55 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அரக்கோணம் நகரசபை தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிடுகின்றனர். அண்ணா.தி.மு.க சார்பில் கண்ணதாசன், சுயேட்சை வேட்பாளர்களாக ஈஸ்வரன், ஆனந்தன், சுரேகா, நரேஷ்குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர். நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இதில் 30 ஆயிரத்து 586 ஆண் வாக்காளர்களும், 31 ஆயிரத்து 432 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்தம் 63 ஓட்டுச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியது. மந்தமாக தொடங்கிய ஓட்டு பதிவு 8 மணிக்கு பின்னர் சூடுபிடிக்க தொடங்கியது. பெண்கள் ஆர்வமுடன் சென்று ஓட்டு போட்டனர். .

ராமநாதபுரம் நகர்மன்ற தலைவராக இருந்த சேகர் இறந்ததால் அந்த பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அண்ணா.தி.மு.க. சார்பாக சேகரின் மனைவி சந்தானலட்சுமி களம் இறங்கி உள்ளார். இவருக்கு போட்டியாக பாரதீய ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் துரைக்கண்ணன் போட்டியிடுகிறார்., 59 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ராமநாதபுரம் நகராட்சியின் 19–வது வார்டுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு அண்ணா.தி.மு.க. வேட்பாளர் சீனி சர்புதீன் மற்றும் சீனி கமருதீன், சிராஜூதீன், முகமதுசிராஜ் என 3 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மாவட்டத்தில் இடைத் தேர்தல் நடக்கும் பகுதிகளில் 25 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுபோல் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்த அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடந்தது. மிகவும் பதட்டமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டி ருந்தனர். பதட்டமான பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. பின்னர் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப் பதிவு நடத்த வாக்குச்சாவடிகளில் உள்ள ஓட்டுப்பெட்டிகள் ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு போகப்ப்பட்டன. 22–ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்