முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.22 - உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் செயலாளர் பா.ஜோதி நிர்மலா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந் தேதி நடைபெற்றது.

இத்தேர்தலில், நகர்புறங்களில் மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய கட்சி சார்பான பதவி இடங்களுக்கும், சிற்றூராட்சி தலைவர் மற்றும் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவி இடங்களுக்கு கட்சி சார்பற்ற முறையிலும் தேர்தல்கள் நடைபெற்றன.

இத்தேர்தலில் ஊரகப் பகுதிகளில் 67.99 சதவீதமும், நகர்ப்புற பகுதிகளில் 63.57 சதவீதமும் வாக்குகள் பதிவாயின. வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்கு எந்திரங்கள் மற்றும் வாக்கு பெட்டிகள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு மிகுந்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 307 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அனைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கும் காவல்துறை மூலம் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது அதிகாரப்பூர்வ முகவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வரும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது அமைதிக்கு சிறிதளவும் பங்கம் ஏற்படாத வகையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மூலம் மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்