முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மனுவை விசாரிக்காமலேயே ஜாமீன் மறுப்பு

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

பெங்களூர், அக் 2 - தண்டனை ரத்து மற்றும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை விசாரிக்காமலேயே விசாரணையை தள்ளிவைத்து விட்டதாக வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி நீதிபதி மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவையும் கர்நாடக ஐகோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து கோர்ட்டுக்கு வெளியே அதிமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதாவின் புதிய மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவர் உடனடியாக ஜாமீனில் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா 5-வது நாளாக சிறையில் உள்ளார். தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு ஜாமீன் மனுவை விசாரிக்கும் என நீதிபதி ரத்தினகலா தெரிவித்தார். வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணையை சிறப்பு அமர்வில் இருந்து வழக்கமான அமர்வுக்கு மாற்றுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் ஜாமீன் கோரியும் தங்களுக்கு வழங்கப் பட்ட தண்டனை, தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும் 4 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ரத்னகலா முன்பு 11-வது நீதிமன்ற ஹாலில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. காலை 9 மணிக்கு நீதிபதி ரத்னகலா தனது இருக்கையில் அமர்ந்து அவசர கால மனுக்களை விசாரிக்க ஆரம்பித்தார்.

காலை 10.30 மணிக்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் பி.குமார், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு வழக்கறிஞர்கள் பவானி சிங், முருகேஷ் எஸ்.மரடி ஆகியோர் வந்தனர். ஜெயலலிதா தரப்புக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் அவரது உதவி வழக்கறிஞர்கள் 3 பேரும் 10.52 மணிக்கு வந்தனர்.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நீதிபதி ரத்னகலா முன்பு காலை 11.05-க்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் ஜாமீன் மனு மீதான வாதத்தை தொடங்குவதற்கு முன்பாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் பேசினார்.

அப்போது,''ஜெயலலிதா மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி கர்நாடக அரசு என்னை அரசு வழக்கறிஞராக நியமித்தது. இந்த வழக்கில் கடந்த 27-ம் தேதி தீர்ப்பு வெளியானதால் அன்றுடன் எனது பணி முடிந்துவிட்டது. என்னால் மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகி வாதாட முடியாது. இது தொடர்பாக கர்நாடக அரசு அரசாணை வெளியிடவில்லை'' என்றார். இதனைத் தொடர்ந்து நீதிபதி ரத்னகலா, ''அரசு வழக்கறிஞர் இல்லாமல் மனுவை விசாரிக்க முடியாது. எனவே வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்'' என்றார்.

இந்நிலையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி ரத்னகலா ஏற்காத அதே மனுவை மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர கால சிறப்பு மனுவாக தாக்கல் செய்யும் முயற்சியில் இறங்கினர். இதற்காக அவரது வழக்கறிஞர்கள் பன்னீர் செல்வம், அன்புக்கரசு, அம்ஜத் பாஷா, மூர்த்தி ராவ் ஆகியோர் நீதித்துறை பதிவாளர் ஆர்.கே.தேசாயை சந்தித்துப் பேசினர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலாவிடம் ஆலோசித்துவிட்டு பதில் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வழக்கறிஞ‌ர்கள் புதிய மனுவை தட்டச்சு செய்து பிற்பகல் 1.30 மணிக்குள் அவசர கால மனுவாக தாக்கல் செய்தனர். இந்த மனுவில்,''குற்றவியல் நடைமுறை சட்டம் 389(1) பிரிவின்படி, 7 ஆண்டுகளுக்குள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர் இல்லாமலே வழக்கை விசாரிக்கலாம். இதற்காக நீதிபதி தனது சுய அதிகாரத்தை பயன்படுத்தலாம். எனவே புதிய மனுக்களை அவசர கால சிறப்பு மனுவாக உடனடியாக விசாரிக்க வேண்டும்''என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீதித்துறை பதிவாளர் ஆர்.கே.தேசாய் இந்த மனு குறித்து விடுமுறை கால நீதிபதிகள் ரத்னகலா, அப்துல் நாஸர் ஆகியோரிடம் ஆலோசித்தார். டெல்லியில் இருந்த தலைமை நீதிபதி வஹேலாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பிற்பகல் 3 மணி அளவில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுவையும் அவசர கால சிறப்பு மனுவாக ஏற்பதாக பதிவாளர் தேசாய் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று ஜெயலலிதா தாக்கல் செய்த அவசர கால சிறப்பு மனு மீதான விசாரணையும் அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அவர் விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது அவரது கட்சியினருக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. நேற்றே அவர் விடுதலையாகி விடுவார் என்று கட்சியினர் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் கட்சியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். கர்நாடக ஐகோர்ட்டுக்கு வெளியே அதிமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையிலும் அதிமுக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் ஜெயலலிதா விடுதலைக்காக அவரது கட்சியினர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளையும் ஆராதனைகளையும் நடத்தினர். ஜெயலலிதா விடுதலையாக இன்னும் 5 நாள் காத்திருக்க வேண்டுமா? என்று அவரது கட்சியினரும் பொதுமக்களும் வேதனையோடு கேள்வி எழுப்பினார்கள். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு கூட நிராகரிக்கப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் சோக அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்