முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் 2 நாட்களுக்கு மழை: வானிலை மையம்

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 20 – தமிழ்நாடு–புதுச்சேரியில் தென்மேற்கு பருவ மழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. சென்னையில் பலத்த மழை பெய்ததால் ரோடுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. நேற்று காலை வரை மீனம்பாக்கத்தில் 74 மி.மீட்டர் மழையும், நுங்கமபாக்கத்தில் 52 மி.மீ மழையும் பெய்துள்ளது.

வண்ணராப்பேட்டை, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, முகப்பேர், ராயபுரம், சாந்தோம், மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், வடபழனி, போரூர், குன்றத்தூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்பட பல பகுதிகளில் மழைநீர் வெள்ளக்காடாக உள்ளது.

இந்த கனமழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது பற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–

தமிழகம் மற்றும் இலங்கை இடையே தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு – புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்கிறது.

இந்த நிலையில் அரபிக் கடலில் லட்சத்தீவு–கோவா இடையே இன்னொரு காற்றழுத்த தாழ்வு (ஸ்டிரப்) உருவாகி இருப்பதால் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையும் தொடங்கியதன் காரணமாக மேக கூட்டங்கள் கலையாமல் அப்படியே நிற்பதால் மழை இடைவிடாது பெய்கிறது.

தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் வடதமிழகம் புதுச்சேரியில் அனேக இடங்களிலும் மழை பெய்யும். சில பகுதிகளில் கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும்.

அதிகபட்சமாக திருப்பூண்டியில் 14 சென்டிமீட்டர் மழையும், காரைக்காலில் 11 செ.மீட்டரும் மழையும் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்