முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வூதிய பயனாளிகளுக்கு வேட்டி சேலை: அமைச்சர் ஆய்வு

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, அக்.30-
தமிழக அரசின் முதியோர் ஓய்வூதிய திட்டப் பயனாளிகளுக்கு, ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் திருவிழா காலங்களில் வேட்டி சேலைகள் வழங்கும் திட்டம்  கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ்,  பொங்கல்–2015 பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதிய திட்டப் பயனாளிகளுக்கு 22 லட்சம் சேலைகளும், 8 லட்சம் வேட்டிகளும் வழங்குவதற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த வேட்டி சேலைகளை உற்பத்தி செய்து வழங்குவதற்கு, சேலம், ஈரோடு, காஞ்சீபுரம் மற்றும் கோயம்புத்தூர் சரகங்களிலுள்ள சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டு, உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.
இந்த உற்பத்தியின் முன்னேற்றம் குறித்து, ஆய்வு செய்வதன் பொருட்டு இந்த  சரக நெசவாளர் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகளுடன், தமிழக கைத்தறி துறை அமைச்சர் கோகுலஇந்திரா  இன்று    கோ-ஆப்டெக்ஸ்  தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு  மேற்கொண்டார்.  இந்த ஆய்வுக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி மற்றும் சேலைகள்  குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள், அரசு நிர்ணயித்துள்ள தர அளவீடுகளின்படி உற்பத்தி செய்து வழங்க வேண்டும் என்று நெசவாளர் சங்க பிரதிநிதிகளுக்கு கைத்தறி துறை அமைச்சர்  அறிவுரை வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் நெசவாளர்களுக்கு தொடர்ந்து  வேலை வாய்ப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதையும்  தமிழக கைத்தறி துறை அமைச்சர் கோகுலஇந்திரா சுட்டிக் காட்டினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங், கோ-ஆப்டெக்ஸ்  தலைவர் கே.வி.மனோகரன், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தி.ந.வெங்கடேஷ்  மற்றும் கோ-ஆப்டெக்ஸ் துணைத்தலைவர் எஸ்.ஜெயந்தி சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்