முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

23-ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்ப உற்சவ விழா

செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்ப உற்சவ விழா வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் (பிப்ரவரி) 3ம் தேதி வரை நடைபெறுகிறது.
 
இது குறித்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் நா. நடராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சொக்கநாத பெருமானே பல்வேறு அவதாரங்களை எடுத்து 64 திருவிளையாடல்களை புரிந்து புராதான தலமாகும். இத்திருக்கோயிலில் தை தெப்ப உற்சவ  விழா வரும் 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை இரு வேளைகளிலும் நான்கு சித்திரை வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் பிப்ரவரி மாதம் 3ம் தேதி நடைபெறுகிறது. தெப்ப உற்சவ தினத்தன்று பஞ்ச மூர்த்திகளுடன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து புறப்பாடாகி அருள்மிகு மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு சென்று அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தேரில் எழுந்தருளி இரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். வரும் 3ம் தேதி தெப்ப உற்சவம் முடிந்து மீண்டும் திருக்கோயிலுக்கு வந்து சேரும் வரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். இந்த திருவிழா காலங்களில் கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விசேஷங்கள் ஏதும் நடத்திட இயலாது என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து