முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எஸ்.டோனி புதிய சாதனை

திங்கட்கிழமை, 6 மே 2024      விளையாட்டு
Dhoni 2023 04 29

Source: provided

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஐ.பி.எல்.லில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றவரான எம்.எஸ். டோனி நடப்பு தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர், ஜித்தேஷ் சர்மாவை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதன்படி. ஐ.பி.எல். வரலாற்றில் 150 கேட்சுகளை பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவற்றில், விக்கெட் கீப்பராக 146 கேட்சுகள், பீல்டிங்கின்போது 4 கேட்சுகள் என மொத்தம் 150 கேட்சுகளை பிடித்துள்ளார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. அவர் 3 விக்கெட்டுகளும், 43 ரன்களும் எடுத்துள்ளார். 

______________________________________________________

சென்னை வீரர் அரிய சாதனை

ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில், ஆல்-ரவுண்டரான ஜடேஜா அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர், 40-க்கு கூடுதலான ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் என ஐ.பி.எல். போட்டியில் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் ஆல்-ரவுண்டருக்கான சாதனையை படைத்திருக்கிறார். இன்றைய போட்டியில், 26 பந்துகளில் 43 ரன்களை அவர் எடுத்துள்ளார். அவற்றில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களும் அடங்கும். அவர் போட்டியில் 165.38 ஸ்டிரைக் ரேட் எடுத்திருக்கிறார். 20 ரன்களை கொடுத்து, பிரப்சிம்ரன் சிங், சாம் கர்ரன் மற்றும் அசுதோஷ் சர்மா என 3 விக்கெட்டுகளை அவர் எடுத்திருக்கிறார்.

இதற்கு முன், 2012-ல் நடந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 48 ரன்கள் மற்றும் 16 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து முதன்முதலாக இந்த சாதனையை அடைந்துள்ளார். இதன்பின்னர் 2021-ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த போட்டியில், 62 ரன்கள் மற்றும் 13 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இந்த சாதனையை இதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷேன் வாட்சன் மற்றும் உலக கோப்பை போட்டியில் இந்தியாவை வெற்றி பெற செய்தவரான ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் ஆகிய இருவர் செய்துள்ளனர். இந்த வரிசையில் ஜடேஜா சேர்ந்திருக்கிறார்.

______________________________________________________

செஸ் வீரர் குகேஷுக்கு பாராட்டு

கேண்டிடேட்ஸ் தொடரில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள செஸ் வீரர் டி. குகேஷூக்கு கனரா வங்கி சார்பில் பாராட்டு தெரிவிக்கும் விதமாக பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி. குகேஷ் 9 புள்ளிகள் பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறியது மட்டுமில்லாமல் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றிப் பெற்றவர் என்ற சாதனையையும் படைத்தார்.

இந்நிலையில், தமிழக வீரர் குகேஷின் சாதனையைப் பாராட்டும் விதமாக கனரா வங்கியின் சென்னை வட்ட அலுவலகம் சார்பில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பரிசுப் பொருள்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கனரா வங்கியின் துணை பொது மேலாளர் சங்கர், உதவி பொது மேலாளர் ஹரேந்திர குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

______________________________________________________

பாக். வீரர்களுக்கு பரிசுத்தொகை

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 28 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 'ஏ' பிரிவில் இந்தியா, அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 6-ந்தேதி அமெரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.கடந்த டி20 உலகக்கோப்பையில் அசத்திய பாகிஸ்தான் இறுதிப்போட்டி வரை சென்று இங்கிலாந்திடம் தோற்றது. 

இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையை வெல்லும் பட்சத்தில் ஒவ்வொரு பாகிஸ்தான் வீரருக்கும் தலா 100,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பொதுவாக சாம்பியன் பட்டம் வென்ற பின்பே இப்படி பரிசுகள் அறிவிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால் தங்கள் வீரர்களுக்கு இப்போதே உத்வேகத்தை கொடுக்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் வாரியம் இந்த அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டி20 உலகக்கோப்பையை வென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரும் இந்திய மதிப்பில் தலா ரூ. 83 லட்சம் பரிசுத்தொகையாக பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

______________________________________________________

தோல்விகள் குறித்து பாண்ட்யா

ஐ.பி.எல். வரலாற்றில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் புதிய கேப்டன் பாண்ட்யா தலைமையில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அந்த அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.  இந்நிலையில் இது போன்ற தோல்விகள்தான் மிகப்பெரிய பாடத்தை கொடுக்கும் என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். அதை எம்.எஸ். டோனி போன்ற தனது ரோல் மாடலால் கூட சொல்லிக் கொடுக்க முடியாது என்று தெரிவிக்கும் பாண்ட்யா இது பற்றி பேசியது பின்வருமாறு:-

" நான் எப்போதும் பொறுப்பை விரும்பும் ஒருவனாக இருக்கிறேன். என்னைப்பொறுத்த வரை இந்த தோல்விகள் என் தவறுகளை சுட்டிக் காண்பித்து அதில் உள்ள பாடங்களை கற்பதற்கான வாய்ப்பை பற்றியதாகும். அந்த அனுபவத்தை யாராலும் உங்களுக்கு கற்பிக்க முடியாது. உங்கள் நெருங்கிய உதவியாளர் அல்லது ரோல் மாடல் அல்லது மஹி பாய் (எம்.எஸ்.டோனி) போன்றவரால் கூட கற்றுத்தர முடியாது. எனவே சில தோல்விகளை வைத்து உங்களால் அனுபவ பாடத்தை கற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் தோல்விகள் கிடைக்கும்போதுதான் உங்களுடைய வேலை என்ன? நம்மால் எதில் சிறப்பாக செயல்பட முடியும்? என்பதை தெரிந்து கொள்ள முடியும்" என்று கூறினார். 

______________________________________________________

உலகக்கோப்பை போட்டிக்கு மிரட்டல் 

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 28 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தத் தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையின்போது வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள போட்டிகளில் தாக்குதல் நடத்துவோம் என்று  பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. இந்த மிரட்டல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் எத்தகைய சவாலையும் சந்திக்கும் விதமாக உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது.

______________________________________________________

கிறிஸ்டன் மீது அசாம் நம்பிக்கை 

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் அண்மையில் நியமிக்கப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அவர் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: கேரி கிறிஸ்டன் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர். அவர் அணியின் பயிற்சியாளராக இணைந்திருப்பது பாகிஸ்தான் அணிக்கு மிகுந்த பலனளிப்பதாக இருக்கும். உலகக் கோப்பைக்கான திட்டங்களை வகுப்பதில் அவர் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். உலகக் கோப்பைக்கான திட்டங்கள் மற்றும் யுக்திகள் குறித்து அணி நிர்வாகத்திடம் அவர் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். எங்களிடம் வலைப்பயிற்சி குறித்த திட்டங்களும் உள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து