முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்தி சிதம்பரத்திற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஒரு வார காலத்திற்குள் கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளிக்காவிட்டால் கட்சியிலிருந்து அவர் நீக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்ற பிறகு மாநில அளவிலான முக்கிய தலைவர்கள், முன்னணி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து காமராஜர் பெயரை சொல்லி வருவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. இன்றைய  சூழ்நிலைக்கேற்ப கட்சியை நடத்தி செல்ல வேண்டும் என்று கூறினார்.
 
இதற்கு கட்சியின் முக்கிய தலைவர்களும், நிர்வாகிகளும் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்களை இளங்கோவன்  அமைதிப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  இதையடுத்து கார்த்தி சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்து வந்தார். இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி புத்தாண்டை முன்னிட்டு ப.சிதம்பரத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் பிரமுகர்களிடம் அவர் பேசும் போது, என்னோடு தொடர்ந்து இருந்தால் உங்களுக்கு பதவிகள், பொறுப்புகள் எதுவும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம்  சந்தித்து  பொதுவாக பேசி மகிழலாம். உங்களுக்கு பொறுப்புகள் ஏதாவது வேண்டுமென்றால் நீங்கள் அதற்குரிய நடவடிக்கைகளில் தாராளமாக ஈடுபடலாம். யாரையும் சந்திக்கலாம் என்று கூறினார்.  அதுமுதல் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள், அவரது மகன் கார்த்திசிதம்பரத்தை சந்தித்து அவரோடு தனித்து செயல்படத் தொடங்கினர்.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரம், தியாகராயநகர், விஜயராகவா ரோடு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் கூட்டத்தை நேற்றுமுன்தினம்   நடத்தியதாக கூறப்படுகிறது.இந்த கூட்டத்தில் ஞானதேசிகன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இயங்கி போது நம்மால் எந்த பொறுப்புகளையும் பெற முடியவில்லை.தற்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை பொறுப்பை ஏற்ற பிறகும் அதே நிலையே தொடர்கிறது. மாநில அளவில், மாவட்ட அளவில் நம்முடைய ஆதரவாளர்களுக்கு பதவிகள் பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் நாம் அடுத்து என்ன முடிவெடுக்கலாம் என்று இந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் பேசியதாக தெரியவருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம்  சென்னை சத்தியமூர்த்தி பவனில் மறைந்த தேசிய தலைவர் நேதாஜியின் திருவுருவப்படத்திற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து நிருபர்கள்  அவரிடம் கார்த்தி சிதம்பரம் குறித்து  கேட்டதற்கு, பதிலளித்து கூறியதாவது:-கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜரை விமர்சித்து பேசிய காங்கிரசாரின் எதிர்ப்புகளை சம்பாதித்தார். தற்போது தனியாக  கூட்டங்கள் நடத்தி காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று சொல்வது எடுபடாது என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தி பேசுவதாக தெரிய வருகிறது.

இது போன்று காமராஜரை விமர்சனம் செய்பவர்களை ஏற்றுகொள்ள முடியாது.எனவே அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் விளக்கம்  கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் கார்த்தி சிதம்பரம் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அவர்  கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து