முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் குற்றவாளியின் பேட்டி: பார்லியில் எதிர்க்கட்சிகள் அமளி

புதன்கிழமை, 4 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து டெல்லி மாணவி கொலையான வழக்கு குற்றவாளியின் டி.வி. பேட்டி தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்தார். குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்ப நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. மேலும் டெல்லி போலீசார் அது தொடர்பான ஆவணப்படத்திற்கும் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
 
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 6ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி  6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொலையான சம்பவம் நடந்தது. நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ்சிங் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறான்.
லண்டனை சேர்ந்த  பெண் சினிமா தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் இந்தியாவின் மகள் என்ர தனது  ஆவணப்படத்துக்காக திகார் ஜெயிலுக்கு சென்று முகேஷ் சிங்கை சந்தித்து பேட்டி எடுத்தார். அப்போது முகேஷ்சிங் பெண்கள் பற்றி கருத்து தெரிவித்தான்.

நாங்கள் பாலியல் பலாத்கார கும்பலாக மாறுவதற்கு இரவு நேரத்தில் வெளியே வந்த பெண்தான் காரணம். இதற்கு அந்த பெண் தன்னையே குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும் என்றான். அந்த பெண்ணும், அவரது நண்பரும் திருப்பி தாக்காமல் இருந்தால் அவர்களை நாங்கள் தாக்கியிருக்க மாட்டோம். இது ஒரு விபத்து. நாங்கள் பாலியல் பலாத்காரம் செய்த போது அமைதியாக அனுமதி அளித்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் தாக்கப்பட்டு இருக்க மாட்டார் என்றும் கூறினான்.

அவனது இந்த கருத்து நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  பலத்த பாதுகாப்பு மிக்க சிறையில் இருக்கும் குற்றவாளியிடம் பேட்டி எடுக்க அனுமதி அளித்தது ஏன் என்ற சர்ச்சை எழுந்தது. அவனது பேட்டி வெளியான உடனே உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் திகார் ஜெயில் டைரக்டர் ஜெனரல் அலோக்குமார் வர்மாவை தொடர்பு கொண்டு பேசி தனது அதிருப்தியை வெளியிட்டார். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் நேற்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. மேல்சபையில் கேள்வி நேரம் தொடங்கிய போது சமாஜ்வாடி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து குற்றவாளியிடம் பேட்டி எடுக்க அனுமதி அளித்தது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மேலும் குற்றவாளியின் பேட்டியை கண்டித்து சமாஜ்வாடி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பேட்டியை கண்டித்து பெண் எம்.பி.க்கள் ஆவேசமாக பேசினார்கள். மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் சரமாரி கேள்வி விடுத்தனர். இதனால் அமளி ஏற்பட்டதை தொடர்ந்து 15 நிமிடம் சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் சபை மீண்டும் கூடியதும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், குற்றவாளியின் பேட்டி மாணவியை அவமானப்படுத்துவது போல் உள்ளது. இதை அரசு கண்டிக்கிறது.

அரசு அனுமதியின்றி ஆவண பட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டே ஆவணப்பட வீடியோவை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கொடுத்த அனுமதியை தவறாக பயன்படுத்தியும், விதியை மீறியும் முகேஷ்சிங்கிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்ப நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. எனவே குற்றவாளியின் பேட்டி ஒளிபரப்பாகாது.

இது போன்ற சம்பவங்களை எந்த அமைப்போ அல்லது யாரும் வணிக ரீதியில் பயன்படுத்துவதற்கு அரசு ஒரு போதும் அனுமதி அளிக்காதுன. இந்த பேட்டி எடுக்க அனுமதி அளித்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீ து சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத்சிங் கூறுகையில்,

குற்றவாளியிடம் பேட்டி எடுத்ததை பற்றி விசாரணை நடத்துமாறு வெளியுறவு விவகார அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளோம். எந்த அடிப்படையில் இந்த பேட்டி ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டதோ அதற்கான விதிமுறைகள் அனைத்தும் நீக்கப்படும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது. எங்களுடைய ஆட்சியில் இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. நாங்கள் செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் பேசி உள்ளோம். இது குறித்து விசாரணையும் நடத்தப்படும். இவ்வாறு ராஜ்நாத்சிங் நிருபர்களிடம் தெரிவித்தார்.
  
முன்னதாக திகார்  ஜெயிலின் டிஜிபி அலோக் குமார் வர்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து இந்த பேட்டிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளித்தார். மேலும் உள்துறை அமைச்சரிடம் அவர் அறிக்கை  ஒன்றை அளித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த பிபிசி பேட்டி குறித்து ராஜ்யசபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.  அதை தொடர்ந்தே அவர் விளக்கமளித்தார்.

முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த நிலையில் இந்த பேட்டியை ஒளிபரப்புவதற்கான தடையை அரசாங்கம் பெற்றுள்ளது.  டெல்லி கோர்ட் இந்த பேட்டியை ஒளிபரப்ப தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. குற்றவாளியின் பேட்டி தொடர்பாக டெல்லி போலீ சார் வழக்கு பதிவு செய்துள்ளனர். யார் பெயரையும் குறிப்பிடாமல் திகார் சிறைத்துறை நிர்வாகம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவனது பேட்டியில் பெண்களை பாதிக்கும் கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதால் அதை செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கூடாது என்று மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வருகிற 8ம் தேதி உலக மகளிர் தினத்தையொட்டி இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாக இருந்தது. டெல்லி போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஆவணப்படத்துக்கு தடை உத்தரவு பெற்றுள்ளனர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து