முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரவி மர்ம மரணம்: சிசிடிவி காட்சிகளை சிஐடி அழித்ததாக புகார்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

பெங்களூரு - ஐஏஎஸ் அதிகாரி டி.கே. ரவியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் முக்கிய தடயமாக கருதப்படும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கர்நாடக சிஐடி போலீஸார் அழித்து விட்டதாக அவரது மாமனார் ஹனுமந்தராயப்பா புகார் கூறியுள்ளார். கர்நாடக மாநில‌ வ‌ணிகவரித் துறை கூடுதல் ஆணையராக பணியாற்றிய‌ டி.கே.ரவி பெங்களூருவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி, இது தற்கொலை போல தெரிகிறது என தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினரும் பொது மக்களும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கர்நாடக அரசு சிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட‌து. அதன்பின் சிபிஐ விசாரணை கோரி எதிர்க்கட்சியினர் சட்டப் பேரவையில் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்த‌னர். இதனைத் தொடர்ந்து ரவியின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கர்நாடக‌ முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
 
இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ரவியின் மாமனார் ஹனுமந்தராயப்பா, இவ் வழக்கை விசாரித்த சிஐடி போலீஸார் ரவியின் அடுக்குமாடி குடியிருப்பு, எனது வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். ரவி பயன்படுத்திய‌ 2 செல்போன்கள், லேப்டாப், ஐபேட் ஆகியவற்றையும் விசாரணைக்காக எடுத்துச் சென்றனர். அதில் ரவிக்கு வந்த தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், சமூக வலைத்தள தகவல் பரிமாற்றம், க‌டிதப் போக்குவரத்து உள்ளிட்டவற்றை ஆராய்ந்தனர். இதனிடையே ரவியின் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதால் சிஐடி போலீஸார் எனது வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது நான் வீட்டில் இல்லை. எனது வீட்டில் இருந்தவர்களிடம் வழக்கு விசாரணைக்கு தேவைப்படுவதாகக் கூறி ரவி இறந்த அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி கேமரா, நாகர்பாவியில் உள்ள எனது வீட்டு சிசிடிவி கேமரா ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் சிசிடிவி கேமரா பதிவுகளை திருப்பிக் கொடுத்தனர். சிஐடி போலீஸாரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணிணி பொறியாளர்களிடம் சிசிடிவி கேமராவை கொடுத்து சோதித்தேன். அப்போது ரவி இறந்த 16-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முன்பு பதிவான காட்சிகளை சிஐடி போலீஸார் அழித்தது தெரியவந்தது. அழிக்கப்பட்ட காட்சிகளை மீட் டெடுப்பதற்காக கணிணி ஆய்வகத்தில் கேமராவைக் கொடுத்திருக்கிறேன். அவர்களது இந்த செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

சிஐடி போலீஸாரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை மறுத்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, ரவியின் மரணத்தில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. சிஐடி போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை அழித்ததாக கூறப்படுவது தவறானது. இதை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து