முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      விளையாட்டு
du-Plessis 2024-05-04

Source: provided

பெங்களூரு : எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று குஜராத்தை வீழ்த்திய பிறகு பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.

ஆல் அவுட்.... 

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 37 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் சிராஜ், யாஷ் தயாஸ்ல், வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக விளையாடி... 

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே கடந்த சில போட்டிகளாக நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறையிலும் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. களத்தில் எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த மைதானத்தில் சற்று கூடுதல் பவுன்ஸ் இருந்தது. இந்த பிட்ச் எங்களுக்கு வழங்கப்படும் போது நான் பவுலர்களிடம் இந்த கூடுதல் பவுன்ஸ் பற்றி பேசியிருந்தேன். அந்த வகையில் பவுலர்களும் சிறப்பாக பந்துவீசி இருந்தனர்.

190 ரன்கள் வரை... 

இந்த மைதானத்தில் 180 முதல் 190 ரன்கள் வரை அடித்தாலும் எளிதாக கடந்திருக்க முடியும். ஆனாலும் நாங்கள் ஸ்கோர் போர்டை பார்க்காமல் உள்ளே சென்றதிலிருந்து எவ்வளவு விரைவாக போட்டியை முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக போட்டியை முடிக்க விரும்பினோம். ஆனால் இடையில் நான்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்ததுமே சற்று பதட்டம் ஏற்பட்டது. அதனாலே சற்று பொறுமையாக சென்று போட்டி முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

நல்ல ஸ்கோராக...

தோல்வி அடைந்த பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதை முதல் இரண்டு ஓவர்களில் பார்க்க நினைத்தோம். அதன் பிறகு அதில் கிடைக்கும் ஐடியாவை வைத்து விளையாட வேண்டும் என்பதுதான் எங்களது திட்டமாக இருந்தது. இந்த மைதானத்தில் 170 முதல் 180 ரன்கள் வரை அடித்திருந்தால் அது ஒரு நல்ல ஸ்கோராக இருந்திருக்கும்.

அடுத்தடுத்து அவுட்...

நாங்கள் பவர் பிளேவில் பேட்டிங் செய்த விதமும், பவர் பிளேவில் பந்து வீசிய விதமும் மோசமாக இருந்ததாலேயே இந்த தோல்வி ஏற்பட்டது. இந்த போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விட்டதாலே இம்பேக்ட் வீரராக ஒரு பேட்ஸ்மேனை களம் இறக்கினோம். அதனால் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரையும் நாங்கள் இழந்து விட்டோம். அடுத்த போட்டியில் இந்த தோல்வியை பற்றி நினைக்காமல் புதிதாக ஆரம்பிப்பது போல் ஆரம்பிக்க உள்ளோம். இந்த தோல்வி வருத்தம் அளித்தாலும் அதனை கடந்து சென்றாக வேண்டும்.

ஒரு பாடத்தை... 

இந்த போட்டியின் மூலம் நிறைய பாசிட்டிவான விசயங்களை எடுத்துச் செல்கிறோம். இனிமேல் நாங்கள் இதே போன்ற தவறுகளை செய்யாமல் இருக்க இந்த தோல்வி எங்களுக்கு ஒரு பாடத்தை தந்துள்ளது. இதற்கு அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் அடுத்தடுத்து போட்டிகளை எதிர்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து