முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முழுஅடைப்பு: பஸ்-ரெயில்கள் வழக்கம் போல் ஓடும்

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் முறைப்படி வழங்குவது இல்லை. அந்த மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பிய பிறகே உபரி நீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்து விடுகிறது.

இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது, ராகி மணல் ஆகிய இடங்களில் 2 புதிய அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்ட மிட்டு அதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கிவிட்டது. இதற்காக கர்நாடக மாநில பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், கர்நாடக அரசு புதிதாக தடுப்பணை கட்டும் முயற்சிக்கு தமிழக அரசும், தமிழக விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது. இப்போது கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதற்கிடையே கர்நாடக அரசின் புதிய அணைகட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழ்நாட்டில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயிகள் போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவையும் ஆதரவு அளிப்பதாக அறிவித்திருக்கின்றன. தமிழ்நாடு டிப்பர் லாரி மற்றும் மண் அள்ளும் எந்திர உரிமையாளர் சங்கமும் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறது.

இதன் காரணமாக, தமிழ் நாடு முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்படுகின்றன. லாரிகள், டிப்பர் லாரிகள், மண் அள்ளும் எந்திரங்களும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த போராட்டத்தின் போது வற்புறுத்தப்படுகிறது. எனவே டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல், சாலை மறியல், ஆர்பாட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இன்று வழக்கம் போல் பஸ்கள் ஓடும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். பஸ் டெப்போக்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சூழ்நிலைக்கு தக்கபடி பஸ்கள் இயக்கப்படும் என்றும் கூறினர். வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களும் பாதுகாப்புடன் இயக்கப்படும் என்றும் கூறினர்.இதுபோல் ரெயில்களும் வழக்கம் போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்புடன் ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் பந்த் போராட்டத்தையொட்டி 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவின் பேரில், ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், சூப்பிரண்டுகள் ஆகியோர் இதற்கான பாதுகாப்பு பணிகளை இன்றே முடுக்கி விட்டுள்ளனர். குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தி உள்ளனர்.தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பந்த் போராட்டத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாவட்டங்களில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் பயன்படுத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் ரவிக்குமார், ஆபாஷ்குமார் ஆகியோரது மேற்பார்வையில் அனைத்து துணை கமிஷனர்களும் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.‘பந்த்’ போராட்டத்தை பயன்படுத்தி வன்முறை சம்பவங்கள் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் இருக்கிறார்கள்.பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை தவிர அனைத்து கட்சிகளுமே நாளை நடைபெறும் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், உளவு பிரிவு போலீசார் பந்த் தொடர்பாக எதிர்க்கட்சிகள் என்னென்ன போராட்டங்களை நடத்த வியூகம் வகுத்து வைத்துள்ளனர் என்பது பற்றிய தகவல்களையும் திரட்டி வைத்துள்ளனர்.

காவிரி டெல்டா பகுதிகளில் ரெயில் மறியல் மற்றும் பஸ் மறியல் போராட்டங்களை நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து பந்த் போராட்டத்தை பயன்படுத்தி யாரேனும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து