முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் துணை மதிப்பீட்டு அறிக்கை தாக்கல்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - நடப்பு  நிதியாண்டில் கூடுதல் செலவுக்கான, ரூ.7,650 கோடிக்கு துணை மதிப்பீடுகளை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.

இது குறித்து முதலமைச்சர் ஒ.பன்னீ்ர்செல்வம் தாக்கல் செய்த துணை மதிப்பீடு வருமாறு:

பேரவையின் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ள துணை மதிப்பீடுகள், மொத்தம் ரூ.7,650.38 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன. இவற்றில், ரூ.3,903.49 கோடி வருவாய்க் கணக்கிலும், ரூ.3,746.89 கோடி மூலதனம், கடன் கணக்குகளிலும் அடங்கும். குடிநீர்ப் பற்றாக்குறையைக் கையாள்வதற்காகவும், வறட்சியைத் தணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநிலப் பேரிடர் பொறுப்பு நிதியில் இருந்து ரூ.95.50 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ஒரகடம் தொழில் வழித்தடத் திட்ட வளர்ச்சியின் ஒரு பகுதியாக, சிங்கப்பெருமாள் கோவில்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை நான்குவழிப் பாதையாக மேம்படுத்துவதற்கு அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இந்த துணை மதிப்பீடுகளில் அதற்கான அடையாள நிதியொதுக்கமாக ஆயிரம் ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.

பல்வேறு வணிக வங்கிகள்-நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்துக்கு வழிவகை முன்பணமாக அரசு ரூ.40 கோடியை அனுமதித்துள்ளது. துணை மதிப்பீடுகளில் ரூ.29.99 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையானது மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறுநிதியொதுக்கம் மூலம் செலவிடப்படும்.

சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.58.65 கோடி செலவில் புறநோயாளிகள், இதர பிரிவுகளுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கு அரசு நிர்வாக அனுமதியளித்துள்ளது. இந்தத் துணை மதிப்பீடுகளில் அடையாள நிதியொதுக்கமாக, ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 252 புதிய பேருந்துகள் வாங்குவதற்காக, குறுகிய காலக் கடனாக அரசு ரூ.36.21 கோடி அனுமதித்துள்ளது. இந்தத் தொகை போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

தரமணியில் உள்ள மத்திய தொழில் நுட்ப நிலைய வளாகத்தில் ரூ.22.77 கோடி செலவில் ஒருங்கிணைந்த பயிற்சிப் பட்டறைக்கு கட்டடம் கட்ட நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாள நிதியொதுக்கமாக ஆயிரம் ரூபாய் உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையம்: நிலத்துக்கான தொகை வழங்கவும், மறுவாழ்வு-மறு குடியமர்த்தல் செலவினங்களுக்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு துணைக் கடனாக அரசு ரூ.598.22 கோடி அனுமதித்துள்ளது. இந்தத் தொகை வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டம் எருக்கூர் கிராமத்தில் மொத்தம் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 16 காற்றுபுகாத தொழில்நுட்ப தானிய சேமிப்புக் கிடங்குகள் கட்ட ரூ.58.48 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாள நிதியொதுக்கமாக ஆயிரம் ரூபாயும், மீதமுள்ள தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறு நிதியொதுக்கம் மூலம் செலவிடப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து