முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று அட்சய திருதியை பண்டிகை: நகை வாங்கும் மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினால், பொன்னும் பொருளும் சேரும் என்பதாக ஐதீகம். அந்த வகையில் இந்த வருடம் பொன் நகைகளை வாங்க அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்று புன்னகையுடன் நகைக்கடைக்காரர்கள் காத்திருக்கிறார்கள்.
கடந்த வருடத்தை விட இவ்வருடம் 20 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் வியாபாரம் ஆகும் என அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். எனினும் கடந்த காலங்களில் இருந்ததைப்போல் இந்த வருடத்தில் நகை வாங்க முன்கூட்டியே பதிவு செய்வதில் வாடிக்கையாளர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பெரும்பாலான நகைக்கடைகளில் கடந்த வருடத்தை விட, 40 சதவீத அளவுக்கு நகை வாங்க முன்கூட்டியே பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நகைக்கடைக்காரர்கள் கவலையடைந்துள்ளனர்.

நாளுக்கு நாள் தங்கம் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்படுவதால் முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் தயங்குவதாக கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது.
முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அட்சய திருதியை நாளில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக சென்னை நகைக்கடை மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவரான ஜெயந்திலால் சல்லானி தெரிவித்தார். கடந்த வருடம் அட்சய திருதியை நாளில் 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2800 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது கிராம் ஒன்றுக்கு 300 ரூபாய் வரை குறைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இவ்வருடம் வாடிக்கையாளர்கள் எத்தனை கிராம் தங்கம் வாங்குகிறார்களோ, அவற்றுக்கு இணையாக வெள்ளி இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் என பல நகைக்கடைகள் சலுகைகளை அறிவித்துள்ளன.

கடைக்கு வாடிக்கையாளர்கள் போல் வந்து நகை திருடுபவர்களை தடுக்க விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. என்.எஸ்.சி. போஸ் சாலையில் மட்டும் நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 50 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகர போலீசும் தி.நகரில் குறிப்பிட்ட சில இடங்களில் தற்காலிமாக சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தியுள்ளது.
தங்கம் வாங்க மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கும் நகைக்காரர்கள் அதில் கலப்படம் செய்யாமல் இருக்கவேண்டும். இதை கருத்தில் கொண்டு தங்கத்தில் கலப்படம் செய்பவர்களுக்கு ஏதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய நுகர்வோர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தங்கத்தில் எளிதில் கண்டறிய முடியாத ஓஸ்மியம், பல்லடியம், இரிடியம் மற்றும் ருத்தெனியம் ஆகியவை கலந்து விற்பதாக நுகர்வோர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. தங்கத்துடன் இரிடியம் சேர்க்கப்பட்ட நகையை அணியும் போது அதில் உள்ள அணுசக்தி மனித உடலின் தோலில் பாதிப்பை ஏற்படுத்தும் என நுகர்வோர் சங்கத்தின் நிர்வாக அறங்காவலரான நிர்மலா தேசிகன் தெரிவித்துள்ளார். இதையெல்லாம் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எடையும், தரத்தையும் உறுதிப்படுத்தாத நகைக்கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கலப்படம் செய்பவர்களுக்கு அபராதமும் விதிக்கவேண்டும் என அரசை நுகர்வோர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தங்கத்தின் தரத்தை தெரிந்து கொள்ள எக்ஸ்-ரே பிளோரசன்ஸ் சோதனை செய்யலாம் என்றும் நுகர்வோர் சங்கம் பரிந்துரைத்துள்ளது.

வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், சென்னை உள்பட பல மாநகரங்களில் உள்ள மிகப்பெரிய நகைக்கடைகள் தங்க நகைக்கான சேதாரத்தை பெருமளவு குறைத்துள்ளன. அதே சமயத்தில் தமிழகத்தின் பல வெளி மாவட்ட நகைக்கடைகளில் இவ்வாறு சேதாரம் குறைக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை. இந்த அட்சய திருதியை நாளிலாவது ஏமாற்றப்படாத வகையில் தமிழகம் முழுவதும் சீரான சேதாரம் மற்றும் கூலி வசூலிக்கவேண்டும் என்று அனைத்து வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கின்றனர். மேலும் தீபாவளி பண்டுக்காக வழங்கப்படும் தங்கக்காசு மற்றும் தங்க நகை போல தங்கத்தின் தரம் தாழ்ந்து விடக்கூடாது என்றும் வாடிக்கையாளர்கள் கவலைப்படுகின்றனர்.

குறிப்பாக வெள்ளிக்கு கூலி மற்றும் சேதாரம் விதிப்பதை அறவே தவிர்க்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து