முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சார ரெயில் டிக்கெட் செல்போனில் பெறும் வசதி விரிவுபடுத்தப்படும்: தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தகவல்

வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை: வரிசையில் நிற்காமல் புறநகர் மின்சார ரெயில் டிக்கெட்டை செல்போனில் பெறும் வசதி சென்னையில்  அறிமுகம் செய்யப்பட்டது. முதல் டிக்கெட்டை டி.கே.ரங்கராஜன் எம்.பி. பதிவு செய்தார்.பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் வசதியாக காகிதமில்லா முன்பதிவில்லாத மின்சார ரெயில் டிக்கெட்டை செல்போனில் பதிவு செய்து பயணம் செய்வதற்கு தெற்கு ரெயில்வே செல்போன் அப்ளிகேஷனை நேற்றுமுன்தினம் அறிமுகம் செய்தது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் டெல்லியில் செய்யப்பட்டு இருந்தது. இந்த சேவையை மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ‘வீடியோ கான்பரன்சிங்’கில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் தொடங்கி வைத்தார். சென்னையில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில், தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் அசோக் கே.அகர்வால், டி.கே.ரங்கராஜன், தலைமை வணிக மேலாளர் சரளா பாலகோபால் ஆகியோர் இருந்தனர்.

மத்திய அமைச்சர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, சென்னையில் அதன் முதல் டிக்கெட்டை டி.கே.ரங்கராஜன் எம்.பி. பதிவு செய்தார். அதையடுத்து, தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அசோக் கே.அகர்வால் பதிவு செய்தார். அதன்பின்னர், இதுகுறித்து டி.கே.ரங்கராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பயணிகளுக்கு உதவி செய்கிற போது, வேலைவாய்ப்பை அது எந்தவிதத்திலும் குறைத்துவிடக்கூடாது என்பதை ரெயில்வே நிர்வாகம் மனதில் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எந்த நேரத்திலும் இதை வலியுறுத்துவது எனது கடமை.

அதே போல், மத்திய அமைச்சர் இந்த சேவையை தொடங்கி வைத்திருப்பது பொருத்தமானது. தனிப்பட்ட முறையில் அவருக்கும், எனக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது என்று அவரே(மத்திய மந்திரி சுரேஷ் பிரபு) கூறி இருக்கிறார். அது உண்மை தான். அது எப்போதுமே தொடரும். ஆனால் ரெயில்வேயை மேம்படுத்துவதற்கு பயணிகளின் நலனை மனதில் வைத்து செயலாற்றுவதற்கு நாங்கள் இணைந்து நிற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் அசோக் கே.அகர்வால் கூறும்போது, ‘தற்போது இந்த திட்டம் முதற்கட்டமாக சென்னை எழும்பூர்-தாம்பரம் இடையே சோதனை அடிப்படையில் செயல்படுத்தியுள்ளோம். விரைவில் அதை விரிவுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். கோடைக் கால சிறப்பு ரெயில் கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இனிவரக்கூடிய காலங்களில் அறிவிக்கப்படும்’ என்றார்.

புறநகர் மின்சார ரெயில் டிக்கெட்டை செல்போனில் பெறும் வசதியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்ற விவரம் வருமாறு:-

‘ஆண்டிராய்டு’ செல்போனில் இணையதள வசதி இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கூகுள் ‘பிளே ஸ்டோரில்’ ‘யு.டி.எஸ். மொபைல் டிக்கெட்டிங்’ என்ற அப்ளிகேஷனை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின்னர், ‘ரெயில்வே இ வாலெட்’டில் கணக்கு தொடங்க வேண்டும். இந்த கணக்கை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது டிக்கெட் கவுண்ட்டர்களில் டா அப் செய்யலாம். இதற்கு டெபிட் கார்டு அல்லது கிரிடிட் கார்டை பயன்படுத்தலாம். அப்போது தான் செல்போனில் டிக்கெட் பதிவு செய்து கொள்ளும் போது, பணத்தை இந்த கணக்கு மூலம் செலுத்த இயலும்.

இதையடுத்து, ‘யு.டி.எஸ். மொபைல் டிக்கெட்டிங்’ அப்ளிகேஷனை ‘கிளிக்’ செய்தால், புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் கேட்கும். அதில் இடங்களை பதிவு செய்துவிட்டு, அதன்பின்னர், எத்தனை டிக்கெட் வேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும்.
தகவல்கள் அனைத்தையும் பதிவு செய்தவுடன், டிக்கெட் சரியாக பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று குறிப்பிடும். அதன்பின்னர் ‘ஓகே’ என்ற பட்டனை அழுத்தினால், டிக்கெட் முழுமையாக பதிவு செய்யப்பட்ட அந்த திரை வரும்.

இந்த டிக்கெட்டின் கால நேரம் பதிவு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து 1 மணி நேரம் வரை செல்லுபடி ஆகும். டிக்கெட்டை மற்றவர்களுக்கு அனுப்ப இயலாது. ஒரு முறை பதிவு செய்த பின்பு மாற்றம் செய்ய இயலாது. பதிவு செய்த பிறகும் இணையதள சேவை இருக்க வேண்டும்.

அப்போது தான் டிக்கெட் பரிசோதகர் வரும்போது டிக்கெட்டை எடுத்து காட்ட முடியும். அப்ளிகேஷன் உள்ளே சென்று ‘ஷோ ஆப்ஷன்’ என்ற பட்டனை அழுத்தினால் பதிவு செய்த டிக்கெட்டை எடுத்து விடலாம். சீசன் டிக்கெட்டை புதுப்பிக்கும் வசதியும் இதில் உண்டு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து