முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பச்சைப் பட்டு உடுத்தி அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

திங்கட்கிழமை, 4 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, பக்தர்களின் கோவிந்தா! கோவிந்தா! முழக்கம் விண்ணதிர தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி மதுரை வைகையாற்றில் இறங்கினார். சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் இந்நிகழ்ச்சி யில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்  குவிந்ததால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

பழம்பெரும், புராண சிறப்பும் கொண்ட மதுரையில் ஆண்டுதோறும் நடந்து வரும் சித்திரை திருவிழா தனித்துவம் பெற்றது. சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தத் திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், அழகர் கோவிலையும் ஒருங்கிணைத்து கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் கோயிலில் 28ம் தேதி பட்டாபிஷேகம், 30ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. மே 1ம் தேதி தேரோட்டம் நடந்தது. இந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 2ம் தேதியுடன் நிறைவடைந்தது. அழகர்கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சித்திரை முழுநிலவு தினமான நேற்று நடந்தது. அழகர் கோவிலில் குடிகொண்டுள்ள சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு மே 2ம் தேதி மாலை 7.15 மணியளவில் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கிப்பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக் கரைப்படி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு மதுரை அருகேயுள்ள மூன்றுமாவடிக்கு வந்தார்.

அங்கு நடந்த எதிர்சேவை நிகழ்ச்சியில் பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைத்து வந்தனர். அழகர் வேடம் அணிந்த பக்தர்கள் அதிர்வேட்டுகள் முழங்க, கள்ளழகரை வாழ்த்திப்பாடி அழைத்தனர். பின்னர் புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வந்தபோது வழிநெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த 410 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலுக்கு வந்தார். அங்கே பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணிக்கு குதிரை வாகனத்தில் சாத்துப்படியாகி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பனசுவாமி கோயிலுக்கு, வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் 3 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில், பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றுக்குப் புறப்பட்டார். காலை 6.48 மணிக்கு வைகையாற்றுக்கு வந்த கள்ளழகரை, வீரராகவ பெருமாள் வரவேற்றார். பின்னர் கள்ளழகர் வைகையாற்றில் உள்ள 2 மண்டபத்தையும் 3 முறை சுற்றி வந்தார். பின்னர் 7.20 மணிக்கு வைகை ஆற்றில் பக்தர்களின் பலத்த கோவிந்தா கோஷத்திற்கு இடையே இறங்கினார்.


அப்போது ஆற்றில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விண்ணதிர கோவிந்தா! கோவிந்தா!! என முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் வீரராகவ பெருமாளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 8.07 மணிக்கு ராமராயர் மண்டபம் நோக்கி கள்ளழகர் புறப்பட்டார். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று முன் தினம் இரவு முதல் குவிந்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடனாக வைகை ஆற்றில் காணிக்கை செலுத்தினர்.

இந்த ஆண்டு கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இதனால், ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் சென்றது. நேற்று பகல் 12 மணிக்கு கள்ளழகர் ராமராயர் மண்டபம் சென்றார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். அழகரைப்போல வேடமிட்ட பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். இது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.  இன்று அதிகாலை 1 மணிக்கு கள்ளழகர் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளுகிறார். பின்னர் தசாவதாரம். பூப்பல்லக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 9ம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, காமராஜ், நத்தம் விஸ்வநாதன், மதுரை கலெக்டர் சுப்பிரமணின், அழகர்கோவில் தக்கார் வெங்கடாஜலம், துணை ஆணையர் வரதராஜன், மீனாட்சி அம்மன் இணை ஆணையர் நடராஜன், தென் மண்டல ஐஜி அபய்குமார் சிங், டிஐஜி ஆனந்தகுமார் சோமனி, போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி மேயர் ராஜன் செல்லப்பா, எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து