முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகுதி சுற்றில் 71 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெளியேற்றியது பெங்களூர்

வியாழக்கிழமை, 21 மே 2015      விளையாட்டு
Image Unavailable

புனே - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் எலிமினேட்டர் சுற்றில், 71 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி, இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் சுற்று ஆட்டம் புனேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய அதிரடி வீரர் கெய்ல் 27 ரன்களும், கோலி 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் ஏமாற்றினாலும், அடுத்து வந்த டிவில்லியர்ஸ், மன்தீப்சிங் ஆகியோர் அபாரமாக விளையாடி எதிரணியின் பந்துகளை சிதறடித்தனர். 

மூன்றாவது விக்கெட்டுக்கு டிவில்லியர்ஸ், மன்தீப்சிங் ஜோடி 113 ரன்களை சேர்த்த நிலையில், 66 ரன்கள் எடுத்த டிவில்லியர்ஸ் ரன் அவுட்டானார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களைக் குவித்தது. மன்தீப் சிங் 54 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் வீரர் குல்கர்னி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஓவருக்கு 9 ரன்கள் என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான வாட்சன் 10 ரன்களுக்கும், சாம்சன் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தனர். கேப்டன் ஸ்மித், கருண் நாயர் ஆகியோர் தலா 12 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

தொடக்க வீரரான ரஹானே மட்டும் 13 ஓவர்கள் வரை களத்தில் நின்று, அதிகபட்சமாக 42 ரன்கள் சேர்த்தார். 19 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த ராஜஸ்தான் அணி, இறுதியில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெங்களூர் வீரர்களான அரவிந்த், ஹர்ஷல் பட்டேல், வெய்ஸ், சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி, ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியது. தற்போது வெற்றி பெற்றுள்ள பெங்களூர் அணி , முதல் பிளேஆப் சுற்றில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சென்னை அணியை இன்று இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சந்திக்கிறது.

வெற்றி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் வீராட் கோலி கூறியதாவது: உண்மையை சொல்ல வேண்டுமானால் 7 ஓவருக்கு பிறகு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து  இருக்கலாமோ என்று நினைத்தேன். அதன்பின் டிவில்லியர்ஸ் - மந்தீப் சிங் ஜோடி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். இளம்வீரர் மன்தீப்சிங் எவ்வளவு சிறந்த வீரர் என்பது இந்த ஆட்டம் மூலம் நிரூபித்தார். கடந்த சீசனைவிட இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறோம். 2013 ம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அது காயத்தை ஏற்படுத்தியது. தற்போது கேப்டனாக மிகமிக மகிழ்ச்சி அடைகிறேன். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற எங்கள் அணி வீரர்கள் முனைப்புடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து