முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகி நூடுல்ஸை மீண்டும் பரிசோதிக்க தேசிய நுகர்வோர் நல ஆணையம் உத்தரவு

திங்கட்கிழமை, 17 ஆகஸ்ட் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி: நெஸ்லே நிறுவனத்திடம் ரூ. 640 கோடி இழப்பீடு கேட்டு மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், மேகி நூடுல்ஸை மீண்டும் பரிசோதிக்க தேசிய நுகர்வோர் நல ஆணையம் உத்தரவிட்டது.  மேலும், அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் மட்டுமே இந்த சோதனையை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தேசிய நுகர்வோர் நல ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் உட்பட 9 வகை நூடுல்ஸ்களில் அளவுக்கு அதிகமாக காரீயம் கலந்திருப்பது ஆய்வக சோதனையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் அமைப்பு கடந்த ஜூன் 5-ம் தேதி நெஸ்லே நூடுல்ஸ்களுக்கு நாடு முழுவதும் தடை விதித்தது.

மேலும் விதிகளை மீறிய அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.640 கோடி இழப்பீடு கோரி தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி நெஸ்லே நிறுவனமும் மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இம்மனுவை கடந்த 13-ம் தேதி விசாரித்த நீதிபதிகள், மேகி உட்பட 9 நூடுல்ஸ்கள் மீதான தடையை நிபந்தனைகளுடன் நீக்கியது.

இதனிடையே இழப்பீடு கோரிய மத்திய அரசின் வழக்கை தேசிய நுகர்வோர் நல ஆணையம் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மனுவை விசாரித்த நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான அமர்வு, மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி மேகி நூடுல்ஸ் மாதிரிகளை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் மீண்டும் பரிசோதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், சோதனை ஆய்வு அறிக்கைகள் பெறுவதில் உரிய நடைமுறைகளை மத்திய அரசு பின்பற்றவில்லை என்று நீதிபதிகள் விசாரணையிபோது குறிப்பிட்டனர். இந்த வழக்கு மீதான விசாரணை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்