முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் ரஷ்யா தாக்குதல்: ஒபாமா கடும் கண்டனம்

சனிக்கிழமை, 3 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதற்கு அமெரிக்கா அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும், ரஷ்யா நடத்தும் இந்த தாக்குதலால் ஐ.எஸ். தீவிரவாதிகள்தான் வலிமை பெறுவார்கள் என்றும் ஒபாமா எச்சரித்துள்ளார். சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகாலமாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. சிரியாவின் சில பகுதிகளை உலகின் மிகக் கொடூரமான ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றியுள்ளது. இந்த ஐ.எஸ். இயக்கத்துடன் அல்நூஸ்ரா பிரண்ட் என்ற அல்கொய்தா அமைப்பு கை கோர்த்துள்ளது.

அதிபர் ஆசாத் பதவி விலக வலியுறுத்தி வரும் அமெரிக்கா ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக நேட்டோ படைகளுடன் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் குதித்தது.ஆசாத்தை எதிர்க்கும் அனைவருமே பயங்கரவாதிகளே என்ற முழக்கத்துடன் ரஷ்யா, சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ரஷ்யாவின் இந்த தாக்குதலில் அமெரிக்கா ஆதரவு குழுக்களும் சிக்கியுள்ளன. இதனால் ரஷ்யாவின் நடவடிக்கையை அமெரிக்கா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.இந்நிலையில் ரஷ்யாவின் சிரியா தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா அதிபர் ஒபாமா முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இது தொடர்பாக ஒபாமா கூறியதாவது:
சிரியாவில் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் நடத்துவது சரியான நடவடிக்கை அல்ல. இதனால் ஆசாத் எதிர்ப்பு சக்திகள் ஒன்றிணைந்து ஐ.எஸ். தீவிரவாதிகள்தான் வலிமை பெறக் கூடிய நிலைமை உருவாகும்.அதிபர் ஆசாத்தை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

ஆசாத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்ற ரஷ்யாவின் நிலைப்பாடு சரியானது அல்ல.சிரியா விவகாரத்தில் அமெரிக்காவை குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதை ரஷ்யா அதிபர் புதின் நிறுத்த வேண்டும். சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ஈரானுடன் இணையும் ரஷ்யாவுக்கு பின்விளைவுகள் மோசமானதாக அமையும். இத்தகைய நடவடிக்கைகளால் சிரியாவில் அமெரிக்கா - ரஷ்யா இடையிலான மறைமுகப் போரை ஏற்படுத்திவிட வேண்டாம்.இவ்வாறு ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்