முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரத்குமார் தொடர்ந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்: நடிகர் விஷால்

சனிக்கிழமை, 10 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

மதுரை: சரத்குமார் தொடர்ந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று மதுரையில் விஷால் கூறியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் பல்வேறு ஊர்களுக்கும் சென்று நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அவர்கள் மதுரைக்கு வந்தனர். நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுவோர்களை மதுரையில் நேற்று அறிமுகம் செய்தனர். பின்னர் விஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதல் கட்டமாக நாடக நடிகர்களை ஏற்கெனவே சந்தித்த நாங்கள், தற்போது 2வது கட்டமாக நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட வந்துள்ளோம். சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மற்றும் காரைக்குடியில் நாடக நடிகர்களை சந்தித்து விட்டு இன்று(நேற்று) மதுரை வந்துள்ளோம். நாங்கள் யார்மீது குற்றச்சாட்டுகளை கூறப்போவதில்லை. உண்மைகளை மட்டும்தான் பேச முடிவு செய்துள்ளோம். 18-ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும், தேர்தல் முறையாக நடக்க வேண்டும். தபால் ஓட்டுகள் முறைப்படி பதிவாக வேண்டும் என்பதை நாடக நடிகர்களுக்கு விழிப்புணர்வாக எடுத்துக் கூறி வருகிறோம்.

நாடக நடிகர்கள் தங்களது வாக்குச்சீட்டுகளை யாரிடமும் கொடுக்கமாட்டோம் என உறுதி அளித்துள்ளனர். இதுவே எங்களுக்கு முதல் வெற்றி. எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் தேர்தல் நிச்சயம் நடக்க வேண்டும். அதன்மூலம்தான் உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை தீர்க்க முடியும். இந்த தேர்தலில் போட்டி இருக்கக்கூடாது என்பதால் சமரச பேச்சு நடத்தினார்கள். தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் சமரச பேச்சு நடைபெற்றது. ஆனால் அவர்கள் தற்போது ஒரு முடிவை அறிவித்துள்ளார்கள். இந்த முடிவால் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. சமரசம் என்றால் என்ன? நாங்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது, சரத்குமார் மட்டும்தான் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் சமரசமா? தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன. இனி சமரசத்துக்கு இடமில்லை.

பாண்டவர் அணிநிச்சயம் தேர்தலை சந்திக்கும். இதனால் யார் என்னை எப்படி திட்டினாலும் கவலையில்லை. நாடக நடிகர்களுக்கும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமாகும், நான் ஆதாரமின்றி சில புகார்களை கூறியதாக சரத்குமார் தொடர்ந்த மானநஷ்ட வழக்கை சட்டப்பதி சந்திப்பேன். எதிர் அணியினர் போட்ட வழக்கிற்கு நான் பதில் கூற விரும்பவில்லை. அதற்கான ஆதாரங்களே சாட்சியாக உள்ளது.

5 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என நடிகர் சங்கத்துக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யாரையும் பாதிக்கும் வகையில் நாங்கள் இதை கூறவில்லை. நடிகர் சங்க பிரச்சினையில் முதல் அமைச்சர் அம்மா பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது. முதல்வர் அம்மா சினிமா துறைக்கு நல்ல பல விஷயங்களை செய்துள்ளார். சில சங்கங்கள் சமரச முயற்சிக்கு வந்தபோது அதுதொடர்பான கருத்துக்களை நான் கூறினேன். முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்