முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் முதல்வராக நிதிஷ் குமார் இன்று பதவியேற்கிறார்

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா: பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் இன்று(வெள்ளிக்கிழமை)பதவியேற்கிறார். பீகார் மாநிலத்தில் கடந்த அக் டோபர் மற்றும் இந்த மாதத்தில் 5கட்டமாக சட்டசபைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா  தளம், லல்லுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டு சேர்ந்து மெகா கூட்டணி அமைத்தன. இந்த கூட்டணி மாநிலத்தில் உள்ள 243 சட்டசபைத்தொகுதிகளில் 178தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்து. அந்த கூட்டணி 3ல் இரு பங்கு தொகுதிகளை கைப்பற்றியது.

இதனால் நிதிஷ் குமார் மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வராக இன்று  பதவியேற்கிறார். அவர் இதற்கு முன்னர் 10ஆண்டுகள் முதல்வராக இருந்தார். இந்த நிலையில் அவர் 3வது முறையாக பீகார் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு நிதிஷ் குமார் தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்தார். இதையடுத்து பிரதமர் மோடி சார்பில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். மேலும் இந்த விழாவில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குலாம் நபி ஆசாத், ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், இமாசலப்பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, அசாம் முதல்வர் தருண் கோகய், சிக்கிம் முதல்வர் பி.கே சாம்லிங், மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்,அருணாச்சலப்பிரதேச முதல்வர் நபம் துகி ஆகியோரும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கிறார்கள்.

மேலும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட பல தலைவர்களும் நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்