முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 102 கோடியாக உயர்ந்தது

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, - நாட்டில் தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதம் வரை 102.26 கோடியாக அதிகரித்துள்ளதாக தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான டிராய் தெரிவித்துள்ளது. மேலும் கம்பியில்லா இணைப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கம்பி இணைப்பு மூலம் தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் டிராய் கூறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 101.41 கோடியாக இருந்தது. கம்பியில்லா இணைப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 98.81 கோடியிலிருந்து செப்டம்பர் மாதம் இறுதியில் 99.66 கோடி யாக உயர்ந்துள்ளது. கம்பி இணைப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2.60 கோடியிலிருந்து 2.59 கோடியாக குறைந்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக தொலை பேசி இணைப்புகளை பயன் படுத்துவோர் 80.40 சதவீதத் திலிருந்து 80.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. 41.6 லட்சம் பேர் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையை (MNP) கோரியுள்ளனர் என்று டிராய் சமீபத்தில் தெரிவித்திருந்தது. செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில் ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 26.37 லட்சம் அதிகரித்து தற்போது மொத்தம் 16.65 கோடி பேர் உள்ளனர். பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 22.28 லட்சம் அதிகரித்து தற்போது மொத்தம் 23.52 கோடி பேர் உள்ளனர். 

வோடபோன் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 18.81 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தா தாரர்களின் எண்ணிக்கை மொத்தம் 11.03 கோடியாக உள்ளது. சிஸ்டமா ஷியாம் டெலிசர்வீஸ் நிறுவனம் 75,455 சந்தாதாரர்களை இழந்து தற்போது 83.60 லட்சம் வாடிக்கையாளர்களையே கொண்டுள்ளது. இணையதள சேவையை பயன் படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 11.73 கோடி யிலிருந்து செப்டம்பர் மாதம் 12.08 கோடியாக அதிகரித்துள்ளதாக டிராய் கூறியுள்ளது.

மேலும் இணை யதள சேவையை வழங்கிவரும் முதல் ஐந்து நிறுவனங்கள் மொத்த இணையதள சேவையை பயன்படுத்துவோரில் 84.01 சதவீத வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்றும் டிராய் கூறியுள் ளது.  இதில் 2.81 கோடி வாடிக்கை யாளருடன் பார்தி ஏர்டெல் முதலிடத்திலும், 2.37 வாடிக்கையாளருடன் வோடபோன் இரண்டாமிடத்திலும், 1.96 கோடி வாடிக்கையாளருடன் ஐடியா செல்லுலார் நிறுவனம் மூன்றாமிடத்திலும் உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 18.9 கோடி வாடிக்கையாளருடன் நான்காமிடத்திலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 1.10 கோடி வாடிக்கையாளருடன் 5-வது இடத்திலும் உள்ளது என டிராய் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்